நேபாளத்தில் மனாஸ்லு என்ற மலைப்பகுதியின் IV முகாமுக்கு சற்று கீழே பனிச்சரிவு ஏற்பட்டதில் மலை ஏறுபவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 12 பேர் காயமடைந்தனர்.






உயர் முகாம்களுக்கு பொருள்களை எடுத்துச் சென்றபோது, ​​IV முகாமுக்குக் கீழே உள்ள பாதையில் பனிச்சரிவு ஏற்பட்டது. தற்போது மீட்பு மற்றும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிம்ரிக் ஏர், கைலாஷ் ஏர் மற்றும் ஹெலி எவரெஸ்ட் ஆகிய விமானங்கள் மூலம் தேடுதல் வேட்டை அப்பகுதியில் நடத்தப்படுகின்றன. 


இருப்பினும், மோசமான வானிலை காரணமாக மலை ஏறி சிக்கியவர்களை மீட்பதில் தடை ஏற்பட்டுள்ளது. செவன் சமிட் டிரக்ஸ், சடோரி அட்வன்சர், இமாஜின் நேபாள் டிரக்ஸ், எலைட் எக்ஸ்பெடிசன், 8K எக்ஸ்பெடிசன் ஆகிய நிறுவனங்களில் மலை ஏற்பவர்களாக பணியாற்றி வந்தவர்களுக்கு பனிச்சரிவின் காரணமாக காயம் ஏற்பட்டுள்ளது.


400 க்கும் மேற்பட்ட மலை ஏறுபவர்கள், இந்த மாதம் 28/29 அன்று சிகரத்தின் உச்சியை அடைய திட்டமிட்டிருந்தனர். மலை ஏறியவர்களும் வழிகாட்டிகளும் பாதுகாப்பாக உள்ளனர் என எலைட் எக்ஸ்பெடிஷன் தகவல் வெளியிட்டுள்ளது.


கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே செப்டம்பர் மாதத்தில், மவுண்ட் மனாஸ்லுவில் மலையேற்றத்தில் ஈடுபட்ட வீரர்களில் பலர் பனிச்சரிவில் சிக்கி கொண்டனர். அவர்களில் 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. காயமடைந்த 10 பேர் காத்மண்டுவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். 3 பேர் காணாமல் போனார்கள். உயிரிழந்தவர்களில் பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் நேபாள நாட்டை சேர்ந்தவர்கள் அடங்குவர்.


அருணாச்சலப் பிரதேசம் காமெங் செக்டார் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக கடந்த சில நாட்களாக வானிலை மிக மோசமகா காணப்பட்டது. இதனால்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த ராணுவ வீரர்கள் கடுமையான பனிப் பொழிவு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டனர். இச்சூழலில் இப்பகுதியில் கடந்த 6ஆம் தேதி கடும் பனிச் சரிவு ஏற்பட்டது.  


இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 7 ராணுவ வீரர்கள் சிக்கினர். இதையடுத்து ராணுவ வீரர்களைத் தேடும் பணி மீட்பு குழுவினர் மூலம் தீவிரமாக நடைபெற்று வந்தது.  


அருணாச்சலப் பிரதேச பனிச்சரிவில் சிக்கிய 7 வீரர்கள் இறந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து பேசிய ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ் வர்த்தன் பாண்டே, வீரர்களின் உடல்கள் பனிச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் உடல்கள் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.