கடந்த ஜூன் 20ஆம் தேதி, அரசு முறை பயணமாக, பிரதமர் மோடி அமெரிக்கா சென்றார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அந்நாட்டின் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி, அமெரிக்கா சென்றிருந்தார். இந்திய, அமெரிக்க உறவை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில், மோடியின் பயணத்தின்போது பல முக்கிய நடவடிக்களை எடுக்கப்பட்டது.


பயணத்தின் முக்கிய நிகழ்வாக, அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதுமட்டும் இன்றி, இரு நாடுகளுக்கு இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 


"அமெரிக்காவின் நீண்ட கால நண்பர் இந்தியா"


இந்த நிலையில், பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் மிகவும் வெற்றிகரமாக இருந்தது. குறிப்பாக, பொருளாதார கண்ணோட்டத்தில் பெரும் வெற்றிகரமாக அமைந்தது என அமெரிக்க அதிபரின் பொருளாதார ஆலோசகர் ஜாரெட் பெர்ன்ஸ்டீன் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க பொருளாதார ஆலோசகர்கள் கவுன்சிலின் தலைவராக உள்ளவர் அமெரிக்க பொருளாதார நிபுணரான பெர்ன்ஸ்டீன்.


பிரதமர் மோடியின் பயணம் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் நேர்காணல் அளித்தார். அதில், பல முக்கிய தகவல்கள் அவர் பகிர்ந்து கொண்டார். இந்திய, அமெரிக்க உறவு குறித்து பேசிய அவர், "இந்தியாவை நமது நாட்டின் நீண்டகால நண்பராக அங்கீகரிக்கிறோம். அதே சமயத்தில், வளர்ந்து வரும் ஜனநாயக நாடாகவும் நாங்கள் அங்கீகரிக்கிறோம். 


இந்த வகையான சந்திப்புகளின் மூலம் அந்த உறவுகளை நாங்கள் வலுப்படுத்தியுள்ளோம். பொருளாதாரக் கண்ணோட்டத்தில், உலகளாவிய வர்த்தகத்திற்கு நாங்கள் மிகவும் திறந்த நிலையில் இருக்கிறோம். மேலும், சில பெரிய மற்றும் சிறிய பொருளாதாரங்களுடன் வர்த்தகம் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.


"அமெரிக்க பொருளாதாரத்தை கீழிருந்து மேல் எடுத்து சென்ற பைடனோமிக்ஸ்"


ஆனால் நிச்சயமாக, அந்த விவாதத்தின் நடுவில் இந்தியா உள்ளது. அதே நேரத்தில், நாங்கள் உள்நாட்டிலும் முதலீடு செய்கிறோம். உள்நாட்டு உற்பத்தியில் முதலீடு செய்கிறோம். பிற நாடுகளில் இருந்து அந்நிய நேரடி முதலீட்டை வரவேற்கிறோம். ஆனால், உங்களிடம் ஆரம்பத்தில் சொன்னது போல தொழில் வகைகளை உயர்த்துவதில் நாங்கள் முன்னிலையில் இருக்கிறோம்.


பல பத்தாண்டுகளாக நாட்டை தோல்வியுற்ற பொருளாதாரத்தை மேலிருந்து கீழாக அல்ல, கீழிருந்து மேலாக வளர்ப்பதற்கான வழியே பைடனோமிக்ஸ் (பைடன் பின்பற்றும் பொருளாதாரம்) ஆகும்" என்றார்.


அதிக எண்ணிக்கையிலான இந்தியர்களுக்கு எச்1பி விசா வழங்குவது குறித்து பேசிய அவர், "கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வேலையின்மை விகிதம் 4 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள தொழிலாளர் சந்தையை நாங்கள் பெற்றுள்ளோம். அது என்ன செய்கிறது என்றால், தொழிலாளர் சந்தையில் அதிகமான மக்களை இழுக்கிறது" என்றார்.