US Plane Crashes: அமெரிக்காவின் வடகிழக்கு பிலடெல்பியாவில் விமான்ம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
கீழே விழுந்து நொறுங்கும் விமானம்:
அமெரிக்காவின் வடகிழக்கு பிலடெல்பியாவில் ஒரு பரபரப்பான சாலையில், ஒரு வணிக வளாகம் அருகே ஒரு சிறிய விமானம் கீழே விழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன. வடகிழக்கு பிலடெல்பியா விமான நிலையத்திலிருந்து 4 கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் இந்த விபத்து நடந்துள்ளத. அந்த விமான நிலையமானது முதன்மையாக வணிக ஜெட் விமானங்கள் மற்றும் சார்டட் விமானங்களுக்கு சேவை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ வைரல்:
சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வரும் டாஷ்கேம் காட்சிகள், ஜெட் விமானம் வானத்திலிருந்து அதிவேகமாக சரிந்து வந்து, தரையில் விழுந்து பலத்த சத்தத்துடன் வெடிக்கிறது. இதனால் எழுந்த தீப்பிழம்பு பல அடி உயரத்திற்கு எழ, கரும் புகையுடன் ஒரு பெரிய நெருப்புப் பந்து வெடிப்பது போல காட்சியளிக்கின்றன. விபத்து நடந்த இடம் ரான்ஹர்ஸ்ட் குடியிருப்புப் பகுதியில் டஜன் கணக்கான கடைகள் மற்றும் உணவகங்களைக் கொண்ட வெளிப்புற ஷாப்பிங் மையமாகும்.
30 விநாடிகளில் நொறுங்கிய விமானம்:
விபத்து நடந்த இடத்தின் காட்சிகள் குடியிருப்பு வீடுகள் தீப்பிடித்து எரிவதைக் காட்டுகின்றன. பிலடெல்பியாவில் உள்ள அவசர மேலாண்மை அலுவலகம் விபத்து நடந்த இடத்தில் "பெரிய சம்பவம்" நடந்ததாகவும், அப்பகுதியில் சாலைகள் மூடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 6:06 மணிக்கு விமான நிலையத்திலிருந்து ஒரு சிறிய ஜெட் விமானம் புறப்பட்டு 1,600 அடி உயரத்தை அடைந்து சுமார் 30 வினாடிகளில் ரேடாரிலிருந்து மறைந்துவிட்டதாக விமானத் தரவு காட்டுகின்றன.
2 பேர் உயிரிழப்பு
லியர்ஜெட் 55 என்ற விமானத்தில் இரண்டு பேர் இருந்தனர். சிறு வணிக வகை ஜெட் ஸ்பிரிங்ஃபீல்ட், மிசோரிக்கு சென்று கொண்டிருந்தது. தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் என FAA தெரிவித்துள்ளது. விமானம் சரிந்து வருவதை கண்ட பொதுமக்கள், அக்கம்பக்கத்தினரை எச்சரித்ததால் பெரும் உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளது.
67 பேர் பலி
மூன்று தினங்களுக்கு முன்பு தான் வாஷிங்டன் டிசியில், பயணிகள் விமானம் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டருடன் மோதியது. இதில் விமானத்தில் பயணித்த 64 பேர் மற்றும் ஹெலிகாப்டரில் பயணித்த 3 பேர் என மொத்தம் 67 பேர் பலியானதாக நம்பப்படுகிறது. விபத்தில் சிக்கி ஆற்றில் விழுந்த விமானத்தில் பயணித்தவர்களின், உடலை மீட்கும் பணி தொடர்ந்து நடபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 ஆண்டுகளில் அமெரிக்காவில் நடந்த மிகப்பெரிய விமான விபத்தாக இது கருதப்படுகிறது.