கொலம்பியாவில் இரண்டு விமானங்கள் வானில் மோதிக்கொண்டதால் நேர்ந்த விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடுவானில் மோதிய விமானங்கள்:
மத்திய கொலம்பியாவில் மெட்டா டிபார்ட்மென்ட்டில் உள்ள ராணுவ தளத்தில் வழக்கம்போல் விமானப்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். நான்கிற்கும் மேற்பட்ட டி-27 டுகானோ மாடல் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தன. அப்போது, எதிர்பாராத விதமாக இரண்டு விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.
விபத்து நிகழ்ந்தது எப்படி?
விபத்து தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. அதன்படி, பயிற்சியில் ஈடுபட்டு இருந்த விமானங்கள் ஒரே நேர்கோட்டில் பறந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒரு விமானம் மற்றொன்றுடன் மோதியது. இதில் ஒரு விமானம் நடுவானிலேயே கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. அடுத்த சில நிமிடங்களில் இரு விமானங்களும் தரையில் விழுந்து நொறுங்கின.
2 பேர் பலி:
விபத்து தொடர்பாக கொலம்பியா விமானப்படை அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், விபத்தில் சிக்கிய விமானங்களின் விமான ஓட்டிகள் இருவருமே உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, இறந்த விமானியின் குடும்பத்தாருக்கும், லெப்டினன்ட் கர்னல் மரியோ ஆண்ட்ரேஸ் எஸ்பினோசா கோன்சாலஸ் குடும்பத்தினருக்கு எங்களது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். விமானிகள் இறப்பதில்லை அவர்கள் உயரே பறக்கிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான விபத்தில் பலியானவர்களுக்கு பலரும் சமூக வலைதளங்களில் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.