Kylian Mbappe: 17வயது சிறுவன் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து, நடந்து வரும் போராட்டம் தற்போது வன்முறையாக மாறி வருகிறது. 


சிறுவன் சுட்டுக்கொலை:


பிரான்ஸின் தலைநகரமான மேற்கு பாரீஸ் புறநகரப் பகுதியான நான்டெர்ரே என்ற பகுதியில் அல்ஜீரியாவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடந்த செவ்வாய் கிழமை அதாவது, ஜூன் 27ஆம் தேதி, தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். பாரீஸில் வாடகைக்கு கார் எடுத்த அந்த 17 வயது சிறுவன்,  நான்டெர்ரே  சாலையில் தனது மூன்று நண்பர்களுடன் சென்றுக் கொண்டிருந்தார்.


அப்போது போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் அவரை விசாரித்துள்ளனர். விசாரணைக்கு ஒத்துழைப்பு தரமால், நஹெல் என்ற சிறுவன் காரை வேகமாக இயக்கியுள்ளார். இதனால், போக்குவரத்து அதிகாரி உடனடியாக தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சிறுவனைச் சுட்டுள்ளார். துப்பாக்கி காயம் அடைந்த சிறுவன் நஹெலை மீட்ட காவல் துறையினர், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் நஹெலின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். 


பிரான்ஸில் வன்முறை:


இந்த விவகாரம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. முதலில் போராட்டமாக தொடங்கப்பட்ட இந்த எதிர்ப்பு, கடந்த  சில நாட்களாக தொடர்ந்து வருவதால், அது கலவரமாக உருவெடுத்துள்ளது. அதிலும், குறிப்பாக பொதுமக்கள் காவலர்கள் மீது தாக்குதல் நடத்துவதுடன், பொதுச்சொத்து மற்றும் தனியார் சொத்துக்களையும் சேதப்படுத்தி வருகின்றனர். இதுவரை 1,100க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளது. அதிலும் குறிப்பாக போராட்டக்காரர்கள் கலவரக்காரர்களாக மாறியுள்ள நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் காயம் அடைந்துள்ளனர். 


பிரான்ஸின் முக்கிய நகரங்களில்,  ”பிரான்ஸ் நஹெலுக்காக” என்ற வாசகத்தை சுவர் உள்பட பல்வேறு இடங்களில் எழுதியுள்ளனர். கலவரம் தொடர்பாக முக்கிய இடங்களில் 4 ஆயிரம்  காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, பிரான்ஸின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரான்ஸ் நாட்டு பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்தார். அதில், “போராட்டம் கலவரமாக மாறியுள்ளது. உங்கள் வீட்டில் உள்ள பதின்பருவத்து இளம் குழந்தைகளை வீட்டில் இருந்து வெளியேறாமல் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்” என கூறியிருந்தார். 


எம்பாப்பே வேண்டுகோள்:


இந்நிலையில், பிரான்ஸ் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான, க்ளியன் எம்பாப்பே தனது சமூகவலைதளப் பக்கமான இன்ஸ்டாகிராமில், பிரான்ஸ் மக்களே வன்முறையைக் கைவிடுங்கள், போராட்டத்துக்கு பல வடிவங்கள் உண்டு. ஆனால் வன்முறை எப்போதும் தீர்வைத் தராது. மாறாக, வன்முறை உங்களின் எதிர்காலத்தை பாதிக்கும்” என குறிப்பிட்டு, வன்முறையைக் கைவிட வலியுறுத்தியுள்ளார். 


காவல் துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட நஹெல்க்கு இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளதால் தற்போது பிரான்ஸில் அதிகப்படியான காவல் துறையினர்  குவிக்கப்பட்டுள்ளனர்.