மனிதர்களின் பெருவாழ்வு என்பது "மனிதம்" என்ற ஒன்றால் கட்டமைக்கப்பட்டது. மனிதம் என்பது சக மனிதன் வீழும் சமயத்தில் அவனுக்கு உறுதுணையாகவோ, ஆறுதலாகவோ இருக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு ஆகும். எளிமையாக, சொல்லப்போனால், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மனிதனை மனிதனே காப்பாற்ற வேண்டும் என்பதுதான். இதைத்தான் ஜனநாயக கோட்பாடாக கொண்டிருக்கிறோம், ஏன் அனைத்து மதங்களும் இதைத்தான் எடுத்துரைக்கின்றன என்றால் அது மிகையல்ல.
இதே பண்பைத்தான் இயற்கையும் கொண்டிருக்கின்றது. தற்போது இணையத்தில் வைரலாகும் ஒரு புகைப்படம் மனிதத்தினை மனிதனுக்கு நினைவூட்டும் வகையில் உள்ளது. இந்த புகைப்படத்தில் உள்ள பெரிய மரம் ஒன்று, வேர்களோடு வெட்டப்பட்ட ஒரு மரத்தினை தாங்கிப்பிடித்துக்கொண்டிருப்பது போல உள்ளது. பார்ப்பதற்கு என்னவோ கைகொடுத்து உதவுது போலத்தான் இருக்கிறது. இது போன்ற மரங்களுக்கு வெவ்வேறு பெயர்கள் கொடுக்கப்பட்டாலும், பொதுவாக "ஜெம்ஸ்" அதாவது அற்புத மரங்கள் என்றுதான் அழைக்கின்றனர்.
இது போன்ற ஒன்றோடு ஒன்று இணைத்துக்கொண்ட மரங்கள் பல இருந்தாலும் வேறோடு வெட்டப்பட்ட ஒரு மரத்தினை தாங்கிப்பிடித்திருப்பது போன்ற மரங்களாக அவை இருப்பதில்லை. மரங்கள் வெவ்வேறு மூலக்கூறுகளோடு இருந்தாலும் அதன் திசுக்கள் ஒன்றோடு இணைத்துக்கொள்ளும் வகையில்தான் இருக்கும். இதனை அடிப்படையாகக் கொண்டு தான் கலப்பின மரங்கள், கலப்பின பழங்கள் , கலப்பின பூக்கள் போன்றவை உருவாக்கப்படுகின்றன.
டிவிட்டரில் வைரலாகும் இந்த புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்த சரியான விவரங்கள் இல்லை என்றாலும், "இது மனிதத்தினை எடுத்துரைப்பதாக உள்ளது" என இணையதளவாசிகளால் பகிரப்படுகிறது. இந்த கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கத்தில் ஒற்றுமை, நல்லெண்ணம் என்பது அவசியாமான ஒன்றாக இருக்கிறது. பெருந்தொற்று காலத்தில் ஒருவருக்கொருவர் நல்லெண்ணத்துடன் இருங்கள்,மனிதம் கொன்று பணம் ஈட்டி என்ன பயன் என்பதே பலரின் கருத்தாக உள்ளது