இந்த ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம் இம்மாதம் 26-ஆம் தேதியன்று மொத்தம் 5 மணி 02 நிமிடங்களுக்கு நீடிக்கிறது.
கிரகணம் என்றால் என்ன?
அறிவியல் ஆசிரியர் பா. ஸ்ரீகுமார் வானில் ஒரு நெருப்பு வளையம் என்ற தனது கட்டுரையில், "சூரியனின் ஒளியால் ஏற்படும் ஒரு வான்பொருளின் நிழல், மற்றொரு வான் பொருளில் விழுவதைத் தான் கிரகணம் என்கிறோம். கிரகணம் வெறும் நிழல்தான். சூரியனை மறைக்கும் நிலவின் நிழல் பூமியில் விழுவது சூரிய கிரகணம், பூமியின் நிழல் நிலவில் விழுவது சந்திர கிரகணம். கிரகணம் என்பது ஒரு நிழல் விளையாட்டு தான். சூரியன், நிலா மற்றும் பூமி விளையாடும் இந்த கண்ணாமூச்சி விளையாட்டை நாம் அனைவரும் கண்டு ரசிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
சந்திர கிரகணம்: சந்திர கிரகணத்தின் போது, சாந்திரன் தன் ஒளியை இழக்கும். ஒரு கருப்பு நிழல் சந்திரனை மெல்ல மெல்ல மறைக்கத் தொடங்கும். சிறிது நேரம் கழித்து அந்த கருப்பு நிழல் மறுபடியும் விலகி மெல்ல மெல்ல சந்திரன் தன் ஒளியை மீண்டும் பெறுகிறது.
அறிவியல் காரணங்கள் என்ன? நிலவு பூமியை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. அதாவது, கோழிமுட்டை வடிவில் சுற்றி வருகிறது. பூமியை சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. அவ்வாறு, சுற்றிவரும் போது, அருகே உள்ள புள்ளியில் வரும்போது, அதன் காட்சிக் கோணம் பெரிதாகவும் (perigree), தொலைவில் உள்ள நிலைக்குச் செல்லும் போது (apogee), காட்சிக் கோணம் சிரியதாகவும் தெரியும். மே 26 அன்று, நிலவு பூமிக்கு அருகே உள்ள புள்ளியில் வருகிறது. இதனால், அந்த நிலவின் பிம்பம் சற்றே பெரிதாக இருக்கும். அதைத் தான் நாம் சூப்பர் நிலா என்று அழைக்கிறோம். முழு நிலவு பௌர்ணமியான மே 26 அன்று, பூமி சந்திரனுக்கும் சூரியனுக்கும் நடுவில் வருகிறது. கிரகணத்தின்போது, பூமியின் நிழல் சந்திரன் மேல் விழுந்து அதை இருளடைய செய்கிறது. அதாவது, பூமி தனது நிழலை சந்திரன் மேல் விழச்செய்கிறது.
சிவப்பு நிலா: மே 26 அன்று பூமியின் வளிமண்டலத்தால் சிதறடிக்கப்படும் ஒளி நிலவின் மேல்படும். குறைந்த அளிநீளமுள்ள ஒளிக்கதிர்கள் வளி மண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு, அதிக அலைநீளமுள்ள சிவப்பு நிறம் மட்டும் நிலாவை அடைகிறது. எனவே, அன்று நிலவு சிவப்பு நிலாவாக காட்சியளிக்கிறது.