எல்லா நாட்டையுமே இயற்கை சீற்றங்கள் அவ்வப்போது துவம்சம் செய்துவிடுகின்றன. அந்த வகையில் தற்போது வெள்ளம், புயலில் சிக்கி சின்னாபின்னமான ஒருநாடு பிலிப்பைன்ஸ்.


தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள ஒரு  தீவு நாடுதான் பிலிப்பைன்ஸ். அந்த நாடே தற்போது உருக்குலைந்து கிடைக்கிறது. தெற்கு மற்றும் மத்திய நகரங்களில் தாக்கிய மேகி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நகரங்களிலும் கடுமையான காற்றும் பேய்மழையும் பெய்தது. மழை, வெள்ளம் மட்டுமின்றி கடுமையான நிலச்சரிவும் ஏற்பட்டது. பலர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். சுமார் 150க்கும் அதிகமானவர்கள் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பலரையும் உறவினர்கள் தேடி வருகின்றனர். இந்நிலையில் 11 வயது சிறுவனை வீட்டில் பயன்படுத்தும் ஃப்ரிட்ஜிக்குள் இருந்து உயிருடன் மீட்புப்படையினர் மீட்டுள்ளனர்.



சிஜே என்ற அந்த சிறுவன் பேபே நகரத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளான். கடுமையான காற்று மழையால் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. திடீரென பெரும் மணற்குவியல் அவனது வீட்டை மூடியுள்ளது. தான் நிலச்சரிவில் சிக்கிவிட்டோம் என்பதை உணர்ந்த சிறுவன் வீட்டில் இருந்த ஃப்ரிட்ஜிக்குள் சென்று அமர்ந்துகொண்டான். நிலச்சரிவில் சிக்கி அங்கும் இங்கும் ப்ரிட்ஜ் அலைக்கழிக்கப்பட்டு ஓரிடத்தில் சென்று ஒதுங்கியுள்ளது. மீட்புப்பணியில் இருந்த போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் ஃப்ரிட்ஜை திறந்து பார்த்தபோது அரை  மயக்கத்தில் சிறுவன் இருந்துள்ளான். கிட்டத்தட்ட 20 மணி நேரம் ஃப்ரிட்ஜுக்குள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு உயிர் பிழைத்துள்ளான் அந்த சிறுவன். 


தான் காப்பாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த சிறுவன் எனக்கு பசிக்கிறது என கூறியுள்ளான்.உடனடியாக சிறுவனுக்கு தண்ணீரும், மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது. தான் மட்டுமே தப்பித்ததாகவும், வேறு யாரும் இல்லை என்றும் அந்த சிறுவன் குறிப்பிட்டுள்ளான். தன்னை மாமா காப்பாற்ற நினைத்தார் என்றும் ஆனால் அதற்குள் நிலச்சரிவு உண்டாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளான் அந்த சிறுவன். அந்த சிறுவனின் அண்ணான 13 வயது சிறுவன் ஒருவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளான். அம்மா மற்றும் தம்பி, தங்கையை போலிசார் தேடி வருகின்றனர்


ப்ரிட்ஜுக்குள் புகுந்து உயிர் பிழைத்த சிறுவன் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளான். “Boy in the Ref” என்ற அடைமொழியுடன் அந்த சிறுவன் இணையவாசிகளால் அழைக்கப்படுகிறான்.


கடந்த வருடமும் புயலால் பாதிக்கப்பட்டது பிலிப்பைன்ஸ். சக்தி வாய்ந்த சூறாவளி புயல் ஒன்று கடந்த டிசம்பரில் தாக்கியது. இந்தப் புயல் கடுமையான பாதிப்பை அங்கு ஏற்படுத்தியது. இந்த சூறாவளி தாக்கியபோது மணிக்கு 185 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசியதால் சுமார் 1 லட்சம் பேருக்கு மேல் தங்களுடைய இடத்தை விட்டு வேறு இடங்களில் தஞ்சம் அடைந்தனர். மேலும் இந்த சூறாவளி புயல் காரணமாக சுமார் 10 ஆயிரம் கிராமங்கள் வரை பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.