அமெரிக்காவில் விமானப் பயணத்தின் போது இனவெறியுடன் அவதூறாக பேசிய ஒருவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சம்பவம் அனைத்தும் வீடியோவில் பதிவாகியுள்ளது. ரசாயனப் பொறியாளரான அவரை மருந்து மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனமான கிளாக்சோஸ்மித்க்லைன் (GSK) பணிநீக்கம் செய்துள்ளது.






பிலடெல்பியா சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தில் ஏறிய சிறிது நேரத்திலேயே அவர் மோசமாக நடந்து கொண்ட காட்சிகள் இணையத்தில் வெளிவந்தன. வீடியோவில், கருப்பு டி-ஷர்ட் அணிந்த அந்த நபர், தனது பையைத் தேடும் போது, ​​விமானத்தில் அங்கும் இங்கும் செல்வதை காணலாம்.
தான் கொஞ்சம் போதையில் இருப்பதாகவும் GSK நிறுவனத்தில் கெமிக்கல் இன்ஜினியராக வேலை செய்து வருவதாகும் அவர் கத்துவது வீடியோவில் பதிவாகியுள்ளது.


அவர் மற்ற பயணிகளை திட்டுவதும், தான் இனவெறியுடன் நடந்து கொள்வதால் விமானத்தில் இருந்து இறக்கிவிடுவீர்களா என்று விமான பணிப்பெண்ணிடம் கேட்டதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிலடெல்பியாவிலிருந்து டல்லாஸ் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தி இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.


வீடியோவில், அந்த நபர் GSK நிறுவனத்தை உலகின் சிறந்த நிறுவனங்களில் ஒன்று என சொல்வதும் ஆனால், அந்த நிறுவனத்தில் இருந்து விலகத் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.






இந்த சம்பவத்தின் எதிரொலியாக, செப்டம்பர் 3 அன்று, வீடியோவில் உள்ள ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கிளாக்சோஸ்மித்க்லைன் அறிவித்தது. லண்டனை தளமாகக் கொண்ட பன்னாட்டு மருந்து நிறுவனமான கிளாக்சோஸ்மித்க்லைன், பொறியாளரின் கருத்து கண்டிக்கத்தக்கது என்றும் அவரின் கருத்துகள் தங்கள் நிறுவனத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கவில்லை என்றும் ஆன்லைனில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.


இந்த சம்பவம் குறித்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. விமானத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக யார் ஏனும் கைது செய்யப்பட்டுள்ளனரா என்பதை பிலடெல்பியா காவல்துறையும் வெளியிடவில்லை.