இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால் ஆட்டோவில் ஒரு கிலோ மீட்டர் பயணிக்க 100 ரூபாய் செலவிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உச்சத்தை எட்டியுள்ளது. அந்நியச் செலவாணி கையிருப்பு இல்லாததால் அன்றாடம் பொருட்களை வாங்க கடன் வாங்கும் நிலைக்கு அந்நாடு தள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வாங்கிய கடனுக்கான வட்டித் தொகையையும் செலுத்த முடியாத திவால் ஆகும் நிலைக்கு ஆளாகியுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு இலங்கையில் பெரும் தட்டுப்பாடு எழுந்துள்ளது. தற்போதையை சூழ்நிலையில் இலங்கை மிகவும் கவலைக்கிடமான ஒரு நிலைமையில் இருப்பதாகவும், இலங்கை மிக மோசமான ஒரு பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பதாகவும், இந்த நிலைமை மேலும் தீவிரமடையக்கூடிய நிலைமைதான் காணப்படுகின்றது என்றும் பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பெட்ரோல் விலையை ஏற்றி இலங்கை அரசு நேற்று உத்தரவிட்டது. இந்த விலை உயர்வு நேற்று அதிகாலை 3 மணி முதல் அமலுக்கு வந்தது. புதிய விலையின்படி, சாதாரண பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 83 அதிகரித்து, ரூ420க்கு விற்கப்படும் என்றும் பவர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.77 அதிகரித்து ரூ. 450க்கு விற்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல ஆட்டோ டீசல் லிட்டருக்கு ரூ. 111 அதிகரித்து ரூ.400க்கு விற்கப்படும் என்றும், சூப்பர் டீசல் லிட்டருக்கு ரூ.116 அதிகரித்து ரூ. 445க்கு விற்கப்படும் என்றும் இலங்கை எரிசக்தித்துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகர அறிவித்திருந்தார்.
எரிபொருள் பிரச்சனை மற்றும் விலை உயர்வை சமாளிக்கவும், அரசுக்கு கூடுதல் வருவாயை ஈட்டவும், போக்குவரத்து உள்பட அனைத்து சேவைக்கட்டணங்களும் அதிகரிக்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் ஏற்கனவே உயர்ந்துள்ள பொருள்களின் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு ஆட்டோவில் ஒரு கிலோ மீட்டர் பயணிக்கு 100 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டிய நிலைக்கு இலங்கை மக்களை தள்ளியுள்ளது.
பெட்ரோலியப் பொருள்கள் மீது நிலவும் பற்றாக்குறை நிலமையை சமாளிக்க குறுகிய கால கடனாக 500 மில்லியன் டாலர்கள் எக்ஸிம் பேங்க் ஆஃப் இந்தியாவிடம் வாங்கலாம் என்று அமைச்சர் காஞ்சனா விஜேசேகர முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே அந்த வங்கியிடமிருந்து 500 மில்லியன் டாலர்கள் கடனாக வாங்கிவிட்ட நிலையில் கூடுதலாக 500 மில்லியன் டாலர்கள் கடன் வழங்குமாறு இலங்கை கோரியுள்ளது. எக்ஸீம் வங்கியிடம் மட்டுமல்லாமல் ஸ்டேட் வங்கியிடமிருந்தும் 200 மில்லியன் டாலர்களை பெட்ரோலிய பொருள்கள் வாங்குவதற்காக இலங்கை கடன் வாங்கியுள்ளது.
இந்த நிலையில் 3ம் நபர்களிடம் இருந்து பெட்ரோலியப் பொருள்களை வாங்க வேண்டாம் என்று அமைச்சர் காஞ்சனா வேண்டுகோள் விடுத்துள்ளார். தனிநபர்கள் சிலர் எரிபொருளை வாங்கி அதில் மற்ற திரவங்களுடன் பெட்ரோலை சேர்த்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் இது போன்ற வியாபாரங்களை பொதுமக்கள் ஊக்குவிக்க வேண்டாம் என்றும், அதுபற்றி தகவல் தெரிந்தால் தெரிய படுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், சிலோன் பெட்ரோல் கார்ப்பரேசன் வெளியிட்ட விளம்பரத்தையடுத்து பெட்ரோல் பொருள்களை சப்ளை செய்வதற்காக 67 நிறுவனங்கள் முன்வந்துள்ளன என்றும், அவற்றில் 39 நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டு, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதோடு, இலங்கைக்கு சிறந்த விலையில் யாரெல்லாம் பெட்ரோல் பொருள்களை வழங்க முடியுமோ அவர்கள் அமைச்சகத்திடம் விண்னப்பிக்கலாம் என்றும் 48 மணிநேரத்திற்குள் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார்.