இலங்கையில் புதிய நிதியமைச்சராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) பொறுப்பேற்றுக் கொண்டார்.
இலங்கையில் தொடரும் கடும் பொருளாதார நெருக்கடி நிலையை சமாளிக்கவும், அதிலிருந்து மீளவும் நிதியமைச்சரின் பங்கு மிகவும் முக்கியம் வாய்ந்தது. அதன் தேவையை உணர்ந்து, நாட்டின் நிதியமைச்சராக ஒருவரை நியமிக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, முன்னாள் நிதியமைச்சர் அலி சப்ரி மற்றும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர்கள் யாரும் பதிவியை ஏற்க முன்வராததால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூடுதலாக நிதியமைச்சர் பொறுப்பையும் ஏற்க முனவந்ததாக கூறப்படுகிறது.
இதையெடுத்து, இன்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில், பிரதமர் ரணில் விக்கிரசிங்க நிதியமைச்சராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
இலங்கை பொருளாதார நெருக்கடி:
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக அங்கு வன்முறை வெடித்துள்ளது. இலங்கை அரசில் இருந்து ராஜபக்சேக்கள் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி நடைபெறும் தன்னெழுச்சி போராட்டங்கள் வன்முறையாக மாறி 8 பேர் பலியானதுடன், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதனிடையே பிரதமர் பதவியில் இருந்து கடந்த திங்களன்று மகிந்த ராஜபக்சே அழுத்தம் காரணமாக ராஜினாமா செய்தார். ராஜபக்சேவின் வீடு உள்ளிட்ட சொத்துக்கள் போராட்டக்காரர்களால் அடித்து நொருக்கி தீக்கிரையாக்கப்பட்டன. இதனிடையே உயிருக்கு அஞ்சி முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது குடும்பத்தினருடன் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் இலங்கை திரிகோணமலை பகுதியில் உள்ள கடற்படை தளத்தில் தஞ்சமானார்.
இதனிடையே இலங்கையில் புதிய பிரதமரை தேர்வு செய்யும் பணியில் அதிபர் கோத்தபய ராஜபக்சே ஈடுபட்டிருந்த நிலையில், புதிய அரசு அமைப்பது தொடர்பாக பல்வேறு கட்சிகளின் தலைவர்களை அவர் அழைத்துப் பேசி வந்தார்.அந்த வகையில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை, பிரதமர் பதவியை ஏற்க வருமாறு பலமுறை அழைப்பு விடுத்தும் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்து அவர் அதனை தவிர்த்தார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவை இலங்கையின் பிரதமராக அதிபர் கோத்தபய ராஜபக்ச தேர்வு செய்தார். அதனை தொடர்ந்து புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றுக் கொண்டார்.
இந்நிலையில், இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையை சூழலை சமாளிக்க ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்