தென் அமெரிக்க நாடான பெருவில் வரலாறு காணாத போராட்டம் நடந்து வருகிறது. அதிபராக பெட்ரோ காஸ்டிலோ பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக நாட்டின் தலைநகர் லிமாவில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வன்முறையில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும் அதன் விளைவாக விமான நிலையம் மூடப்பட்டதாகவும் அரசு தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள அன்டாஹுய்லாஸ் விமான நிலையத்திலிருந்து புகை வெளியேறும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமான நிலையத்தில் 50 காவல்துறை அதிகாரிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்களை போராட்டக்காரர்கள் சூழ்ந்துள்ளனர் என போக்குவரத்துதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற போராட்டத்தை கலைக்க காவல்துறை அதிகாரிகள் கண்ணீர் புகைக்குண்டை வீசியுள்ளனர். பெரு விமான போக்குவரத்துதுறை அதிகாரி இதுகுறித்து கூறுகையில், "சனிக்கிழமை பிற்பகல் முதல் அன்டாஹூய்லாஸ் விமான நிலையம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, தாக்குதல்கள், நாசவேலைகள் மற்றும் தீ வைக்கப்பட்டுள்ளது.
50 விமான நிலைய ஊழியர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விமான நிலைய முனையத்தில் சுற்றி வளைக்கப்பட்டனர். மேலும் சிலர் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.
பெரு தேசிய காவல்துறை அதிகாரி இதுகுறித்து பேசுகையில், "அதிகாரிகள் மாநில காவல்துறையுடன் விமான நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.
ஒரு அதிகாரி காயமடைந்தார். போராட்டக்காரர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த மரணம் குறித்து தெளிவுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த நபர் இளம் வயதவர்" என்றார்.
இதைதொடர்ந்து, வன்முறையில் இரண்டாவது மரணம் ஏற்பட்டதாக உள்துறை அமைச்சர் சீசர் செர்வாண்டஸ் தெரிவித்தார். சமீபத்திய வன்முறையை முடிவுக்கு கொண்டு வருமாறு காவல்துறை தரப்பிலும் உயர் மட்ட அரசு தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 8 மற்றும் 9ஆம் தேதி, லிமா வழியாக நூற்றுக்கணக்கான மக்கள் பேரணி நடத்தினர். காஸ்டிலோவை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அதிபர் டினா போலுவார்டே ராஜினாமா செய்யகோரியும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
சனிக்கிழமையன்று அண்டாஹுய்லாஸில் மூவாயிரம் பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றது குறிப்பிடத்தக்கது.