ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவு அரசு கவிழ்க்கப்பட்டு ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றியது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, பெண்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் பல்வேறு விதிகள் அமல்படுப்பட்ட வண்ணம் இருக்கிறது.


மேலும், அங்கு இங்குமாய் குண்டுவெடிப்பு, துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தலைநகர் காபூலில் சீன தொழிலதிபர்கள் மத்தியில் புகழ்பெற்றிருக்கும் ஹோட்டலை அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய நபர்கள் இன்று தாக்கி உள்ளனர். 


அங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாகவும் துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. காபூல் லோங்கன் ஹோட்டலில் இருந்து புகை வெளியேறுவதைக் காண முடிந்தது. இதையடுத்து, தலிபான் பாதுகாப்புப் படையினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று அந்த பகுதி முழுவதுக்கும் சீல் வைத்தனர்.


கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாதுகாப்பை மேம்படுத்தியதாக தலிபான்கள் கூறி வருகின்றனர். ஆனால், ஏராளமான குண்டுவெடிப்புகள் மற்றும் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கிறது. பெரும்பாலான தாக்குதல்களுக்கு உள்ளூர் ஐஎஸ் குழு பொறுப்பேற்றுள்ளது.


 






இதுதொடர்பாக காபூல் காவல்துறை செய்திதொடர்பாளர் கூறுகையில், "சமூக விரோதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை அடைந்து, அப்பகுதியில் இருந்து அனைவரையும் அப்புறப்படுத்தி வருகின்றனர்" என்றார்.


வர்த்தக மற்றும் குடியிருப்பு பகுதியான ஷஹர்-இ-நாவ் அருகே இருந்த செய்தியாளர்கள் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு சத்தத்தை கேட்டதாக ஆப்கான் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. கட்டிடத்தின் கீழ் தளத்தில் இருந்து மக்கள் கத்துவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


குறிப்பிட்ட அந்த ஹோட்டல் சீன தொழிலதிபர்கள் மத்தியில் பிரபலமான ஒன்று. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து, அதிகப்படியான சீனர்கள் அங்கு குவிந்தனர். அதிக ஆபத்து கொண்டதாக இருந்தபோதிலும் அதிக பணத்தை ஈட்டுவதற்காக அவர்கள் வர்த்தகத்தில் இறங்கியுள்ளனர்.


ஆப்கானிஸ்தானுடன் 76 கிலோமீட்டர் (47-மைல்) எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் சீனா, தலிபான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. ஆனால், முழு தூதரக அதிகாரிகளை களமிறங்கி உறவை பேணி வருகிறது.