பெருவில் உள்ள லிமாவின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட LATAM ஏர்லைன்ஸ் விமானம் ஓடுபாதையில் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.
பெருவின் ஜார்ஜ் சாவேஸ் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் நேற்று புறப்படும்போது LATAM ஏர்லைன்ஸ் விமானம் ஒரு தீயணைப்பு வாகனத்துடன் மோதியதில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். எனினும், இந்த சம்பவத்தில் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏர்பஸ் ஏ320நியோ (airbus a320 neo) விமானத்தில் 102 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்கள் இருந்தனர்.
ஓடுபாதையில் இருந்த வாகனத்துடன் ஜெட்லைனர் மோதியதில் இந்த விபத்து நடந்ததாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
விமான நிலையம் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தி வைத்து விபத்துக்கான காரணங்களை விசாரித்து வருகிறது. லிமா ஏர்போர்ட் பார்ட்னர்ஸ், ஜார்ஜ் சாவெஸ் விமான நிலையத்தை இயக்கும் நிறுவனம், அனைத்து செயல்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறியது. பின் "அனைத்து பயணிகளுக்கும் எங்கள் குழு தரப்பில் தேவையான உதவிகள் வழங்கப்படுகிறது," என்று கூறியது.
கடந்த மாதம், 48 பயணிகளுடன் ஒரு LATAM விமானம் கடுமையான புயலில் பயணித்த போது பராகுவேயின் அசன்சியனில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சமீப காலமாக விமானம் மூலம் விபத்து ஏற்படுவது அதிகரித்து வருகிறது. நவம்பர் 6-ஆம் தேதி கிழக்கு ஆப்பிரிக்க நாடான டான்சானியாவின் வடமேற்கு நகரமான புகோபாவில் தரையிறங்குவதற்கு சற்று முன், மோசமான வானிலை காரணமாக 43 பேருடன் சென்ற விமானம் தான்சானியாவில் உள்ள விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.
அதேபோல் நவம்பர் 13ஆம் தேதி அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற விமான கண்காட்சியில் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தைச் சேர்ந்த இரண்டு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தின்போது இரண்டு விமானங்களும் சுக்குநூறாக நொருங்கும் காட்சி இணையத்தில் வைரலானது. இதில் 6 பேர் உயிரிழந்தனர்.
நவம்பர் மாதத்தில் மட்டும் இதுவரை 3 விமானங்கள் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.