ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் போன்ற சர்வதேச அரங்குகளில் அடிக்கடி பொய் பிரச்சாரங்களை முன்வைக்கும் கெட்ட பழக்கம் கொண்டுள்ள பாகிஸ்தானுக்கு சர்வதேச சமூகம் கூட்டாக கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.


முன்னதாக நேற்று ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டம் நடந்தது. இதில் பாகிஸ்தான் மீண்டும் ஜம்மு காஷ்மீர் பற்றி பேசியது. இதனைக் குறிப்பிட்டுக் காட்டிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கான இந்திய ஆலோசகர் ப்ரதிக் மாத்தூர், இன்று நான் இந்த அவையில் எங்களுக்கு இருக்கும் பதிலளிக்கும் உரிமையை  பயன்படுத்தவிருக்கிறேன். ஏனெனில் பாகிஸ்தான் மீண்டும் இந்த அரங்கில் ஜம்மு காஷ்மீர் பற்றி அவதூறாக பேசியுள்ளது.


காஷ்மீர் விவகாரம் : 


"ஜம்மு காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. ஆனால் பாகிஸ்தான் சர்வதேச அரங்குகளின் மாண்பினை மதிக்காமல் கூட அவ்வப்போது காஷ்மீர் பிரச்சனையைப் பேசும் கெட்டப் பழக்கத்தைக் கொண்டுள்ளது. இதற்கு சர்வதேச சமூகத்தின் கூட்டான கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதேவேளையில் பாகிஸ்தானைப் பார்த்தால் கொஞ்சம் பாவமாக இருக்கிறது. உண்மையைக் கூட அவர்கள் உணரவில்லையே என்பதால்" என்று கூறியுள்ளார்.


முன்னதாக இந்தக் கூடத்தில் ஐ.நா.வுக்கான நிரந்தர தூதர் ருச்சிரா கம்போஜ் பேசியிருந்தார். அப்போது அவர் ஜி4 நாடுகள் சார்பாக ஒரு அறிக்கையை வாசித்திருந்தார். ஜி4 கூட்டமைப்பில் இந்தியா, ஜப்பான், பிரேசில், ஜெர்மணி உள்ளன.  ஏற்கெனவே ஒருமுறை ருச்சிரா காம்போஜ் ஒரு கண்டனத்தை இதே அரங்கில் பதிவு செய்திருக்கிறார். அதில் அவர், "ஐ.நா. அரங்கத்தை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் மீண்டும் ஒரு தரப்பு இங்கே இந்தியா மீது அற்பமான, ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதுபோன்ற அறிக்கைகள் ஒட்டுமொத்த அரங்கின் கண்டனத்திற்கு தகுதியானது. அதேவேளையில் தொடர்ந்து தவற்றை பரப்பும் அந்த நாட்டைப் பார்த்து பரிதாபமாகவும் இருக்கிறது.


பிரிக்க முடியாதது : 


உலக அரங்கில் இப்படியெல்லாம் பேசுவதற்குப் பதிலாக பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தினால் எங்கள் மக்கள் உயிருக்கான உரிமையை சுதந்திரத்தைப் பெறுவார்கள். ஜம்மு காஷ்மீர் எப்போதுமே இந்தியாவின் ஒரு பகுதி. இதில் பாகிஸ்தானின் நிலைப்பாடு என்னவாக இருந்தாலும் சரி ஜம்மு காஷ்மீர் இந்தியாவிலிருந்து பிரிக்க இயலாதது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறியிருந்தார்.


அப்போது பாகிஸ்தான் "சர்வதேச சட்டங்களின் கீழ், எந்த நாட்டுடன் இணைய வேண்டும் என்ற முடிவுக்கான உரிமை என்பது வெளிநாட்டு அல்லது காலனி ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் மக்களுக்கே அதாவது ஜம்மு காஷ்மீர் மக்களைப் போன்றோருக்கே பொருந்தும். எனவே சுய முடிவுக்கான உரிமைக்கு வித்திடும் நடவடிக்கைகள் ராணுவ கட்டுப்பாடு இல்லாத இடத்தில் ஐ.நா மேற்பார்வையில் நடக்க வேண்டும்" என்று கூறியிருந்தது.


இந்நிலையில் மீண்டும் ஐ.நா. அரங்கில் பாகிஸ்தான் ஒரு குட்டு வாங்கியுள்ளது.