ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவது போல் இன்று (நவம்பர் 19ஆம் தேதி) சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. 


சர்வதேச ஆண்கள் தினம் நவம்பர் 19ஆம் தேதி (இன்று) கொண்டாடப்படுகிறது. ஆண்களின் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் சமூக-பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளை முன்னிலைப்படுத்தவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் ஆண்கள் தங்கள் பணி மூலம் உலகிற்கு கொண்டு வரும் மதிப்பையும் பிறருக்கு முன்மாதிரியாக இருக்கவும் அவர்களை ஊக்குவிப்பதற்கு கொண்டாடப்படுகிறது. 


சர்வதேச ஆண்கள் தின தரவுகளின்படி, முதன்முதலில் டாக்டர் ஜெரோம் டீலக்சிங் (Dr Jerome Teelucksingh )அவர்களால் 1999 இல் கொண்டாடப்பட்டது. டிரினிடாட் மற்றும் டொபாகோவில் (Trinidad and Tobago.) உள்ள வெஸ்ட் இண்டீஸ் பல்கலைக்கழகத்தில் வரலாற்று விரிவுரையாளராக டீலக்சிங் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  தொடக்க காலக்கட்டத்தில் கரீபிய தீவுகளில் ஆதரவைப் பெற்ற ஆண்கள் தினம் அதன்பின்பு, தொடர்ச்சியாக பிறநாடுகளின் ஆதரவுகளையும் பெற்று தற்போது சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.


இரண்டு குழந்தைகளின் தாயான இந்தியாவின்  ஆண்களுக்கான வழக்கறிஞர் உமா சல்லாவும் இந்த நாளை பிரபலப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளார். அவர் பல அமைப்புகளின் நிறுவனர் மற்றும் 2007 ஆம் ஆண்டில் இந்தியாவில் சர்வதேச ஆண்கள் தினத்தை கொண்டாட முன்னோடியாக இருந்தார். இந்த தினத்தை அனுசரிப்பதன் மூலம், திருமதி சல்லா பெண்கள் மட்டுமல்லாமல் சில ஆண்களும் பாலியல் ரீதியான சீண்டல்களுக்கு ஆளாகின்றனர் என்பதை சுட்டிக்காட்டினார்.


2022 ஆம் ஆண்டு "ஆண்களுக்கும் சிறுவர்களுக்கும் உதவுதல்" (helping men and boys) என்ற தலைப்பில் சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த உலகம் முழுவதும் அனைத்து குடும்பத்திலும் சமூகத்திலும் அவர்களின் பங்களிப்பை பாராட்டும் வகையிலும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் இந்த தலைப்பின் கீழ் இந்த ஆண்டு சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.   


அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷியா, இங்கிலாந்து உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் 45 வயதிற்குட்பட்ட ஆண்களின் மரணத்திற்கு தற்கொலையே முக்கிய காரணம் என WHO தரவுகள் கூறுகின்றன. ஆண்கள் தோற்றத்தில் வலிமையானவர்களாக இருந்தாலும் பாலியல் அடையாளம், பாலியல் ரீதியான துன்புறுத்தல் ஆகியவை அவர்களுக்கு உளவியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்சணைக்கள் பற்றி வெளிச்சத்திற்கு கொண்டு வந்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது.  
 


தந்தையாக இருந்தாலும், சகோதரனாக இருந்தாலும் அல்லது கணவனாக இருந்தாலும், ஆண்கள் அனைவரின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். சர்வதேச ஆண்கள் தினம் ஆண்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர அவர்களுக்கு உதவுகிறது. இது ஆண்களின் உடல் ரீதியான மட்டுமல்லாமல் சமூக ரீதியான  ஆரோக்கியத்தை உறுதி செய்யும் நோக்கமாக கொண்டாடப்படுகிறது. இருப்பினும், இந்த நாள் ஆண்களைக் கொண்டாடுவதற்கு மட்டுமல்ல, பாலின உறவுகளை மேம்படுத்துவதற்கும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும் ஆகும்.


இந்த  சர்வதேச ஆண்கள் தினத்தில் ஆண்களுக்கு வாழ்த்துதல் மற்றும் நன்றியைத் தெரிவிப்பது போன்ற எளிமையான மற்றும் இனிமையான வாழ்த்துக்களால் இந்த நாளைக் கொண்டாடலாம்.