இந்தியா ஏற்றுமதியை தடை செய்ததால், அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்கள் சண்டை போட்டுக்கொண்டு அரிசி மூட்டைகளை தூக்கி செல்லும் காட்சி வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது, 


கொரோனா தொற்றின் பாதிப்பு, உக்ரைன் போர், காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் அமெரிக்காவுக்கு பாஸ்மதி அரிசியை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது. உலக அளவில் 40 சதவீத அரிசி ஏற்றுமதி இந்தியாவில் இருந்து நடைபெற்று வருகிறது. ஆனால், அண்மையில் நிகழந்த பேரிடர்களும், நோய் தொற்றும் விளைச்சலையும், பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்தியதால் உள்ளூர் மக்களின் நலன் கருதி அரிசி ஏற்றுமதியை இந்தியா குறைத்து கொண்டது. 


இந்தியாவின் இந்த முடிவு சர்வதேச உணவு சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அரிசி ஏற்றுமதியை நிறுத்துவதாக வெளியான இந்தியாவின் அறிவிப்பால் சர்வதேச அளவில் உணவு பாதுகாப்பின்மை ஆபத்தை அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. இந்தியாவின் அதிரடி நடவடிக்கையால் துருக்கி, சிரியா, பாகிஸ்தான், அமெரிக்கா, வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகள் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 


கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து பாஸ்மதி இல்லாமல் அரிசியை 10.3 மில்லியன் டன் அளவுக்கு ஏற்றுமதி செய்ததாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த அளவுக்கு அதிக அளவில் செய்யப்படும் ஏற்றுமதியை அரசு திடீரென நிறுத்தியதால், இந்தியாவை சார்ந்து இருக்கும் மற்ற நாடுகள் உணவு தடுப்பாட்டை சந்தித்துள்ளன. இந்தியா மட்டும் இல்லாமல் மாச்கோ கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை ரத்து செய்ததால் உலக நாடுகளிடம் கோதுமை விலை அதிகரித்தது. அரிசி மட்டும் இல்லாமல் கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதிக்கு கடந்த ஆண்டு இந்தியா தடை விதித்து இருந்தது. இந்த நிலையில் , இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றுமதி செய்யாததால் அமெரிக்காவில் இருக்கும் மக்கள் அரிசிக்காக சண்டையிடும் நிலை ஏற்பட்டுள்ளது.






அமெரிக்காவில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் கூட்டமாக ஒன்று திரண்ட மக்கள், மூட்டைகளில் இருக்கும் அரிசியை போட்டி போட்டு கொண்டு வாங்க முயற்சிக்கின்றனர். ஒருசிலர் அரிசியை அடுக்கி வைத்து இருக்கும் பகுதியின் மீது ஏறி மூட்டைகளை எடுத்து செல்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள உணவு தட்டுபாடு மேலும் தீவிரமடையாமல் இருக்க வேண்டும் என அனைவரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருக்கும் குடும்பத்துக்கு ஒரு மூட்டை அரிசியை அரசு விநியோகித்ததாகவும் தகவல் பரவியது.