போர்ட் சூடான் விமான நிலையத்தில் சிவிலியன் விமானம் விழுந்து நொறுங்கியதில் நான்கு ராணுவ வீரர்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர்.






ஆப்ரிக்கா நாடான சூடானில் பல ஆண்டுகளாகவே உள்நாட்டுக் கலவரம் நடந்து வருகிறது. அங்கு நீண்ட காலமாக அதிபராக இருந்த ஒமர் அல் பஷீருக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. ஆனால், அந்தப் புரட்சிக்குப் பின்னர் அவர்கள் எதிர்பார்த்தபடி ஜனநாயக முறையில் ஆட்சி அமையவில்லை. மாறாக அங்கு ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. ராணுவ ஆட்சியிலும் மக்கள் நிம்மதியாக இல்லை.


அங்கு வறுமையும் தண்ணீர்ப் பஞ்சமும் தலை விரித்தாடுகிறது. அது மட்டுமல்லாமல் எண்ணெய் வளங்கள் மூலமாக வரும் வருமானமும் மக்களுக்கு முழுமையான நலத்திட்டங்களாக சென்று சேர்வதில்லை. இப்படி, ஜனநாயக ஆட்சி இல்லாத நிலையில் அங்கு மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இந்நிலையில் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினர் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.


சூடான் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே போர் தொடங்கப்பட்டு நேற்றுடன் 100 நாள் முடிந்துள்ளது. இந்நிலையில், போர்ட் சூடான் விமான நிலையத்தில் சிவிலியன் விமானம் விழுந்து நொறுங்கியதில் நான்கு ராணுவ வீரர்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 3000 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 2.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் சூடான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளார். 100 வது நாள் குறிக்கும் வகையில், டார்பூர் பகுதியில் ராக்கெட் துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதாகவும், மேற்கு டார்பூரில் ஸ்னைப்பர்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


ஜூலை 8 ஆம் தேதி, ஓம்டுர்மானில் உள்ள குடியிருப்பு பகுதியில் வான்வழித் தாக்குதலில், குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர். கடந்த மாதம் கார்ட்டூமில் வான்வழித் தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர் என சுகாதார அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த மாத தொடக்கத்தில், மேற்கு டார்பூரில் 87 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது, ​​அவர்கள் அனைவரும் துணை ராணுவ  படைகளால் கொல்லப்பட்டதாக ​​ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சில் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டது. அந்த  அறிக்கையின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஏராளமான மக்கள் இன மோதலில் கொல்லப்பட்டனர் என்றும் அவர்கள் பிராந்தியத்தின் தலைநகரான எல்-ஜெனினாவுக்கு வெளியே ஒரு புதைகுழியில் புதைக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  


விமானத்திலேயே சிறுநீர் கழித்த பெண்: வைரலாகும் வீடியோ- என்ன காரணம்?