இத்தாலியில் இசைகலைஞர் ஒருவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கிட்டத்தட்ட 9 மணி நேரம் அறுவை சிகிச்சையின்போது, அந்த இசைகலைஞர் சாக்ஸபோன் வாத்தியத்தை வாசித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜிஇசட் என அடையாளம் காணப்பட்ட 35 வயதான நோயாளி, ரோமின் பைடியா சர்வதேச மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதையடுத்து, அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
நோயாளியின் நரம்பியல் செயல்பாடுகள் மோசமாகாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் அறுவை சிகிச்சையின்போது நோயாளியை மருத்துவர்கள் விழித்திருக்க வைத்தனர் என மருத்துவமனை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை பிரிவு தலைவரும், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவர் கிறிஸ்டியன் ப்ரோக்னா இதுகுறித்து பேசுகையில், "ஒவ்வொரு மூளையும் தனித்தன்மை வாய்ந்தது.
இந்த நபருக்கும் அப்படிதான். விழித்திருக்க வைத்து அறுவைசிகிச்சை செய்வது நரம்பியல் நெட்வொர்க்கை மிக துல்லியமாக கண்டறிய உதவுகிறது. விளையாடுதல், பேசுதல், நகர்தல், நியாபகம் வைத்து கொள்ளுதல், எண்ணுதல் ஆகிய செயல்பாடுகள் இந்த நரம்பியல் நெட்வொர்க்கின் அடிப்படையில்தான் பணிக்கப்படுகிறது.
விழித்திருக்க வைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்வதன் குறிக்கோள், மூளைக் கட்டியை அகற்றும் அதே வேளையில் மூளையின் குறிப்பிட்ட பகுதிகளில் அமைந்துள்ள கேவர்னோமாக்கள் போன்ற வாஸ்குலர் குறைபாடுகளை அகற்றுவதாகும். நோயாளியின் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாப்பதும் இதன் நோக்கமாகும்" என்றார்.
இந்த அறுவை சிகிச்சைக்காக அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவர் ப்ரோக்னா தலைமையில் மிகவும் சிறப்பு வாய்ந்த 10 பேர் கொண்ட சர்வதேச குழு, அந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டது.
அறுவைசிகிச்சைக்கு முன், ஜிஇசட், தனது இசை திறன்களைப் பற்றி மருத்துவர்களிடம் கூறி உள்ளார். இதுவே மருத்துவர்களுக்கு பயனுள்ளதாக மாறியது. ஏனெனில், அறுவை சிகிச்சையின் போது அவர் மூளையின் வெவ்வேறு செயல்பாடுகளை கண்டறிய இது உதவியது.
1970இல் திரைப்படமான 'லவ் ஸ்டோரி'யின் தீம் பாடலையும், இத்தாலிய தேசிய கீதத்தையும் 9 மணி நேர அறுவை சிகிச்சையின்போது அந்த நபர் இசைத்துள்ளார். தனது மூளை அறுவை சிகிச்சையின் போது பயத்தை விட அமைதியாக உணர்ந்ததாக ஜிஇசட் கூறியுள்ளார்.
நோயாளி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியதில் பெருமிதம் கொள்வதாகவும், ஒவ்வொரு அறுவை சிகிச்சையின் போதும் இந்த மருத்துவப் பிரிவு பற்றிய அறிவு முன்னேறி வருவதைப் பெருமையாகக் கருதுவதாகவும் மருத்துவர் ப்ரோக்னா கூறியுள்ளார்.