பாகிஸ்தானுக்கு எதிராக வெளிப்படையாக பேசியுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று" என குறிப்பிட்டுள்ளார். பைடனின் இந்த கருத்து உலக அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


கலிபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற பிரச்சாரக் குழுவின் வரவேற்பு நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார். அப்போது, சீனா மற்றும் ரஷ்யாவையும் அவர் கடுமையாக சாடியிருந்தார்.


சீனா மற்றும் விளாடிமிர் புதினின் ரஷ்யா தொடர்பான அமெரிக்க வெளியுறவுக் கொள்கை பற்றி பைடன் பேசிக் கொண்டிருந்த போது, பாகிஸ்தான் குறித்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. உலகிலேயே மிகவும் ஆபத்தான நாடாக பாகிஸ்தானைக் கருதுவதாகக் கூறி அவர் தனது உரையை முடித்தார். 


 






பைடன் பேசியதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு நபர் (ஷி ஜின்பிங்) இருக்கிறார். தனக்கு என்ன தேவை என்பதை அவர் புரிந்து கொள்கிறார். ஆனால், அவருக்கு அதிகமான சிக்கல்கள் உள்ளன. நாம் அதை எவ்வாறு கையாள்வது? ரஷ்யாவில் நடக்கும் சம்பவங்களை ஒப்பிடுகையில் அதை எவ்வாறு கையாள்வது? 


மேலும், நான் நினைப்பது என்னவென்றால் உலகின் மிக ஆபத்தான நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் இருக்கலாம்.  எந்த ஒரு ஒற்றுமையும் இல்லாமல் அணு ஆயுதங்களை கொண்டுள்ளது. 21ஆம் நூற்றாண்டின் தற்போதைய நிலையை மாற்ற அமெரிக்காவுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.


எனவே, மக்களே, நிறைய நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், 21ஆம் நூற்றாண்டின் தற்போதைய நிலையை மாற்ற அமெரிக்காவுக்கு மகத்தான வாய்ப்புகள் உள்ளன" என்றார். பைடனின் கருத்துக்கள், அமெரிக்காவுடனான உறவுகளை மேம்படுத்த விரும்பும் ஷெஹ்பாஸ் ஷெரீப் அரசாங்கத்தின் முயற்சிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.


அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு உத்தி வெளியிடப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. புதன்கிழமை அன்று, நாடாளுமன்றத்தின் முக்கிய கொள்கை ஆவணத்தை பைடன் அரசு வெளியிட்டது. அதில், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளாலும் அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.


48 பக்கங்கள் கொண்ட இந்த ஆவணத்தில் பாகிஸ்தானைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.