பஸ்ஸில் இடம் பிடிக்க நம்மவர்கள் சண்டை போடுவதை நாம் பார்த்திருக்கிறோம். இடம் பிடிப்பதில் பல யுக்திகளையும் நம்ம ஆட்கள் கடைபிடிப்பார்கள். ஜன்னல் வழியே துண்டை வீசுவது, துணியை வீசுவது, கையில் இருக்கும் லக்கேஜ்ஜை வீசுவது , ஏன்.. சில நேரங்களில் குழந்தைகளை கூட உள்ளே வீசி இடத்தை பிடிப்பார்கள். 

இறுதியில் பஸ் மீது ஏறிச் செல்லும் போது, அதே இருக்கையில் இருவர் இடம் போட்டிருக்கும் போது தான் பிரச்சனை ஆரம்பிக்கும்.

இது பஸ்ஸில் தான் என்றில்லை... விமானத்திலும் நடக்கிறது. நடந்திருக்கிறது. ஆனால், இடம் போடுவதில் பிரச்சனை இல்லை. ஏனென்றால், விமானங்களை பொருத்தவரை, புக் செய்யும் போதே இருக்கை எண்ணுடன் இடம் ஒதுக்கப்பட்டுவிடும். ஆனால்... விமானத்திற்கு காத்திருக்கும் போது, அதனால் ஏற்படும் பொறுமை இழப்பால் பயணிகளுக்குள் அடித்துக் கொண்டால்...? அது இன்னும் உக்கிரமாக இருக்கும்!



 

அமெரிக்காவின் மினிஸ்சோடா பகுதியில் உள்ள எம்.எஸ்.பி.,(Minneapolis−Saint Paul International Airport) என்கிற விமான நிலையத்தில் தான், விமானம் தாமதம் ஆனதால் ஏற்பட்ட அழுத்தத்தில், பயணிகள் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இதுக்கெல்லாமா அடித்துக் கொள்வார்கள் என்று நீங்கள் நினைக்கலாம்... இதுக்கும் அடித்துக் கொள்கிறார்கள் என்பதை தான் காட்சிகள் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. 


அதுவும் சாதா அடி இல்லை... போர்களம் போல பல குழுக்களாக பிரிந்து மோதிக்கொள்கிறார்கள். ஆண், பெண் பேதமின்றி அவரவர் கைகளில் கிடைத்ததை வைத்து ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளும் அந்த வீடியோ வெளியாகியுள்ளது. வார இறுதியில் நடந்த இந்த சம்பவத்தை அதிர்ச்சியோடு பார்க்காமல் அதை ரசித்து மகிழ்கிறது அமெரிக்க சமூக வலைதளங்கள்.


 

நம்மூர் ஏர்போர்ட்களில் அவ்வளவு பாதுகாப்பு இருக்கும். ஆனால் அமெரிக்கா போன்ற வல்லரசு நாட்டில், ஏர்போட் என்பதே நம்மூர் பஸ் ஸ்டாண்ட் போல தான் போல. அதுவும் உள்ளூர் விமான நிலையங்கள், டவுன் பஸ் ஸ்டாண்ட் போல தெரிகிறது. எச்சரிக்கப்பட்ட பகுதி என்றெல்லாம் இல்லாமல், நினைக்கும்  இடத்தில் மோதிக்கொள்கிறார்கள். சக பயணிகள் தான் தடுக்கிறார்கள், தாக்குகிறார்கள். பாதுகாப்பு அதிகாரிகள் யாரும் வந்ததாக தெரியவில்லை. அங்கு நிற்பதாகவும் தெரியவில்லை. 

ஆனால் ஒன்று... ஆண், பெண் பாகுபாடின்றி அனைவரும் அடி சரமாறியாக விழுகிறது. இதெல்லாம் என்ன மாதிரியான சமத்துவமோ! பெரும்பாலான விமான நிலைய சண்டைகள், விமானங்களுக்காக காத்திருக்கும் போது, மனஉளைச்சல் ஏற்பட்டு நடப்பதாக கூறப்படுகிறது. இதுவும் அந்த ரகத்தைச் சேர்ந்த சண்டை தான்.