இந்தியாவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களில் மிகவும் கோரமான மற்றும் மறக்க முடியாத கருப்பு நாளாக இருப்பது மும்பை தீவிரவாத தாக்குதல் ஆகும். கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி நிகழ்ந்த இந்த தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.


மும்பை தாக்குதலின் மூளை:


இந்த தாக்குதலுக்கு மூளையாக கருதப்படுபவர் ஹபீஸ் முகமது சயீத். லஷ்கர் இ தொய்பா அமைப்பை உருவாக்கியது இவர்தான் என்று கூறப்படுகிறது. லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கான நிதிகளை பெற்றுத்தருவது, தீவிரவாத செயல்களுக்கு பணப்பரிமாற்றம் செய்வது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.


இந்த நிலையில், பாகிஸ்தான் நாளிதழ் அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளது. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹபீஸ் முகமது சயீத்தின் ஆதரவில் இயங்கி வரும் பாகிஸ்தான் மார்கஸி முஸ்லீம் லீக் ( பி.எம்.எம்.எல்.) கட்சி பாகிஸ்தானில் அடுத்தாண்டு பிப்ரவரி 8ம் தேதி நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. அந்த கட்சியின் சார்பில் அந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர்களை நிறுத்த அந்த கட்சி முடிவு செய்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாகிஸ்தான் மார்கஸி முஸ்லீம் லீக் போட்டி:


மேலும், ஹபீஸ் முகமது சயீத்தின் மகனான தல்ஹா லாகூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. அந்த தொகுதியில் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப் போட்டியிட உள்ளார். பி.எம்.எம்.எல். கட்சி மீதான குற்றச்சாட்டுக்கு அக்கட்சியின் தலைவர் காலித் மசூத் சிந்து மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் பாகிஸ்தான் மார்கஸி முஸ்லீம் லீக் கட்சியின் பின்னணியில் ஹபீஸ் சயீத்தின் நடவடிக்கை எதுவுமே இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.


மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர், லஷ்கர் இ தொய்பாவை உருவாக்கியவர் என்று பல தீவிரவாத நடவடிக்கைகளில் மூலக்காரணமாக கருதப்படும் ஹபீஸ் சயீத் தற்போது பாகிஸ்தானின் லாகூர் சிறையில் உள்ளார். அவர் தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் இந்தியாவில் அடிப்படை ஆதாரமே இல்லாமல் வைக்கப்பட்டவை என்று மறுப்பு தெரிவித்திருந்தார்.


உற்றுகவனிக்கும் இந்தியா:


கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் 17ம் தேதி தீவிரவாத நடவடிக்கைகள், தீவிரவாத செயல்பாடுகளுக்கு நிதி திரட்டியது உள்ளிட்ட காரணங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டார். இந்த குற்றங்களுக்காக அவருக்கு 42 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனாலும், பாகிஸ்தான் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை.


இந்த சூழலில் மிகப்பெரிய பயங்கரவாதியாக கருதப்படும் ஹபீஸ் சயீத்தின் ஆதரவு பெற்ற கட்சியும், அவரது மகனும் வரும் பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.


மேலும் படிக்க: "உக்ரைனில் போர் நிறுத்தத்துக்கு தயார்" - கண்டிஷன் போட்ட ரஷிய அதிபர் புதின் - என்னவா இருக்கும்?


மேலும் படிக்க:Dubai: அச்சச்சோ.. துபாயில் வெறும் காலுடன் 104 கி.மீ., ஓடிய பெங்களூருக்காரர்.. என்ன காரணம் தெரியுமா?