பெங்களூரைச் சேர்ந்த 34 வயது நபர் ஒருவர் துபாயில் 104 கி.மீ., வெறும் காலுடன் ஓடிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் பாராட்டைப் பெற்றுள்ளது. 


சர்வதேச காலநிலை மாற்ற நடவடிக்கை உச்சி மாநாடு கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இதில் காலநிலை மாற்றத்திற்கான நிதியுதவி மற்றும் பூமியிலிருந்து கிடைக்கும் எரிபொருட்களை கட்டுப்படுத்துதல்  ஆகியவை முன்னிலைப்படுத்தப்பட்டு இந்த மாநாடு நடைபெற்றது.  


COP 28 எனப்படும் இந்த மாநாட்டால்  துபாயில் வசித்து வரும்  ஆகாஷ் நம்பியார் என்ற இளைஞர் உத்வேகம் கொண்டார். தொடர்ந்து மனித குலத்துக்கு அச்சுறுத்தலாக உள்ள காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராட தேவையான கூட்டு முயற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தார். இதனையடுத்து ‘நாம் நேரத்தை கடந்து விட்டோம்’ என்ற வாசகத்துடன் மாராத்தான் பயணம் மேற்கொண்டார்.  


அல் குத்ராவில் உள்ள லவ் ஏரியிலிருந்து விடியற்காலையில் தனது பயணத்தை தொடங்கிய ஆகாஷ் நம்பியார், பாம் ஜுமைரா, புர்ஜ் அல் அரப், கைட் பீச், ஜுமைரா பீச், லா மெர் பீச், எதிஹாத் அருங்காட்சியகம் உள்ளிட்ட துபாயின் உள்ளிட்ட முக்கிய அடையாளமாக கருதப்படும் இடங்களை எல்லாம் கடந்தார். கடைசியாக அவரின் பயணமானது அந்நாட்டின் மிக உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் நிறைவடைந்தது. 






கிட்டதட்ட  துபாயின் தெருக்களில் வெறுங்காலுடன் 17 மணி நேரம் 20 நிமிடங்களில் 104 கிமீ தூரத்தை கடந்தார் ஆகாஷ் நம்பியார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘வானளாவிய கட்டிடங்களின் நகரம் துபாய்க்குள் ஒரு 100KM!! பாம் ஜுமேரா, புர்ஜ் அல் அரப், கைட் பீச், ஜுமேரா கடற்கரை, லா மெர் பீச், எதிஹாத் அருங்காட்சியகம் மற்றும் எதிர்கால அருங்காட்சியகம் ஆகியவற்றை உள்ளடக்கிய உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவை லவ் ஏரியிலிருந்து சூரிய உதயத்திற்குப் பிறகு ஓட்டம் தொடங்கியது. காலநிலைச் சவாலின் பிரச்சினையைத் தீர்க்கவும், சாமானிய மக்களுக்கும் சில விழிப்புணர்வைக் கொண்டுவரவும் நான் விரும்பினேன். எனது நண்பர்கள் இல்லாமல் இது சாத்தியமில்லை’ என தெரிவித்துள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த ஆகாஷ் நம்பியாரின் இந்த முயற்சி மிகுந்த பாராட்டுகளைப் பெற்றுள்ளது.