டையூவில் தம்பதியினர் பாராசைலிங் செய்த போது கயிறு அறுந்து கடலினுள் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயற்கையை ரசிப்பது என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. குறிப்பாக கடற்கரைகளில் காலார நடப்பது முதல் அங்குள்ள சாகச விளையாட்டுகளையும் மேற்கொண்டால் சொல்லவா வேண்டும். கண்டிப்பாக அப்படியொரு என்ஜாய்மெண்டை அனுபவிக்காமல் அந்த சுற்றுலாதளத்தை விட்டு போகமாட்டார்கள். அதிலும் கோவா, டையூவில் கடற்கரைகள் அதிகமாக இருப்பதோடு பாராசைலிங் அங்கு மிகவும் பிரபலம். அந்த அனுபவத்தை அனுபவிக்க சென்ற குஜராத் தம்பதிகள் தான் கடலினுள் விழுந்து உயிருக்குப் போராடினர். என்ன நடந்தது தெரியுமா?
குஜராத்தைச்சேர்ந்த அஜித் கதாத் மற்றும் அவரது மனைவி சர்லா கதாத் தங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் டையூவில் உள்ள நாகோவா கடற்கரைக்கு விடுமுறைக்காகச் சென்றுள்ளனர். அப்போது அங்கு சுற்றுலாப்பயணிகளை வெகுவாக ஈர்க்கும் பாராசைலிங் மேற்கொள்ளத் தம்பதியினர் முடிவெடித்துள்ளனர். இதற்காக படகு மூலம் நடுக்கடலில் சென்று அங்கிருந்து பாராசூட்டில் பறப்பதற்கான அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துக்கொண்டனர். பின்னர் மகிழ்ச்சியுடன் பறந்த தம்பதியினர் பாராசூட்டில் பறந்து சென்றனர்.
இதனைப்பார்த்த அவர்களது உறவினர்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர். இதனையடுத்து ஒரு சில நிமிடங்களிலேயே தம்பதியினர் சென்ற பாராசூட்டின் கயிறு அறுந்து நடுக்கடலில் விழுந்தது. இதனைப்பார்த்த அஜித் கதாட்டின் சகோதரர் ராகேஷ் அலறினார். பின்னர் இச்சம்பவம் குறித்து கடலோர காவல்படைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. பாராசைலிங் சேவையை வழங்கிவரும் தனியார் நிறுவனமான பாம்ஸ் அட்வென்ச்சர் மற்றும் கடலோர காவல்படையினர் கடலினுள் விழுந்த தம்பதியினரை பத்திரமாக மீட்டனர். இவர்கள் லைப் ஜாக்கெட்டுகள் அணிந்திருந்தால் எந்தவித பாதிப்பும் அவர்களுக்கு ஏற்படவில்லை எனக்கூறப்படுகிறது.
மேலும் பலத்த காற்றின் காரணமாக பாராசூட் கயிறு அறுந்து விழுந்தது என்று பாராசைலிங் சேவையை வழங்கி வரும் பாம்ஸ் அட்வென்ச்சர் மற்றும் மோட்டார்ஸ் போர்ட்ஸ் உரிமையாளர் தெரிவித்துள்ளார்கள். இருந்தபோதும் நடுக்கடலில் சாகசம் செய்யும் போது பாதுகாப்பு அவசியமான ஒன்று என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மகிழ்ச்சியுடன் தம்பதியினர் மேற்கொண்ட பாராசைலிங் ஏற்பட்ட நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. மேலும் இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோ காட்சிகள் பார்ப்போர் அனைவரையும் பதைபதைக்க வைக்கிறது என்று தான் கூற வேண்டும். இனி வரும் காலங்களிலாவது இயற்கைச் சூழலை புரிந்துக்கொண்டும் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
.