ட்விட்டர் நிறுவன புதிய சிஇஓ-ஆக பொறுப்பேற்றுக்கொண்ட பரக் அக்ராவல், இஸ்லாமியர்களுக்கு எதிரானவர், நிற வேற்றுமை பாராட்டுபவர் என பரவி வந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அவர். பரக் அக்ராவல் இஸ்லாமிய வெறுப்பாளர், நிற வேற்றுமை பாராட்டுபவர் என அமெரிக்க ரிபப்ளிக்கன் கட்சி அவர் மீது குற்றச்சாட்டு வைத்தது. 11 வருடங்களுக்கு முன்பான அவருடைய  ட்விட்களை பகிர்ந்து இது போலக் குற்றம்சாட்டியது. அதற்குத் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பரக் அக்ராவல். அவருடைய 11 வருடங்களுக்கு முந்தைய ட்வீட்டில், ’அவர்கள் முஸ்லீம்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் வேறுபாடு காட்ட மாட்டார்கள் என்றால், நான் ஏன் வெள்ளையர்களையும் இனவாதிகளையும் வேறுபடுத்த வேண்டும்’ எனப் பதிவிட்டிருந்தார். நகைச்சுவையாளர் ஆஷிக் மாண்ட்வி நிகழ்வு ஒன்றில் கூறிய கருத்து அது.






ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்த கென் பக் என்பவர் அதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பரக்கைத் தாக்கியிருந்தார். இதையடுத்து அந்தக் கட்சியைச் சேர்ந்த மார்ஷா ப்ளாக்பர்ன் என்பவரும் பரக்கைக் குற்றம் சாட்டியிருந்தார். 


இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதில் அளித்திருந்த பரக், ‘கருத்தைப் பகிர்ந்தது குறித்து கருத்து சொல்பவர்களைக் கண்டால் எனக்கு ஆச்சரியமாக உள்ளது’ எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும் அந்த ட்வீட் பதிவிடப்பட்டிருந்த வருடம் 2010 அந்த வருடம் அவர் ட்விட்டரில் பணியாற்றவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.






யார் இந்த பரக் அக்ராவல்?


ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஒவாக ஜேக் டார்சி கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தார். இந்தச் சூழலில் அவர் திடீரென அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதனையடுத்து ட்விட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக பரக் அக்ராவல் நியமிக்கப்பட்டுள்ளார். 


இந்திய ஐஐடி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி பாம்பேவில் (IIT BOMBAY) பரக் அக்ராவல் இளங்கலை பட்டத்தை முடித்தார். அதன்பின்னர் 2011ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக் கழக்கத்தில் கணினி அறிவியியலில் முனைவர் பட்டமும் பெற்றார். அந்த சமயத்தில் யாஹூ, மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பயிற்சி பெறும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதன்பின்னர் 2011ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தில் விளம்பரம் தொடர்பாக செயல்படும் பொறியியாளராக பணியில் சேர்ந்தார். அதன்பின்னர் ட்விட்டர் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவில் பணியாற்றினார்.


அப்போது ட்விட்டர் தளத்தின் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தியதில் முக்கிய பங்கு இவருக்கு உண்டு. குறிப்பாக பயனாளர்களுக்கு ஏற்ப அவர்களுக்கு ட்வீட்களை காட்டும் செயற்கை நுண்ணறிவு திறனை இவர் மேம்படுத்தினார். அது ட்விட்டர் தளம் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் கவர்ந்த தளமாக மாற முக்கியமாக உதவி செய்தது. இந்தத் துறையில் சிறப்பாக பணி செய்ததன் மூலம் அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு  ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (சிடிஓ) பொறுப்பை பெற்றார். அப்போது முதல் ட்விட்டர் நிறுவனத்தின் சிடிஓவாக ட்விட்டர் தொழில்நுட்பங்களில் பல முக்கிய விஷயங்களை கொண்டு வருவதில் பெரும் பங்கு வகித்தார்.