முதல் மனைவி இறந்தபிறகு ஆண்கள் சிலர் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கின்றனர். அந்த வகையில் ஒருவர் முதல் மனைவி இறப்பிற்கு பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த இரண்டாவது மனைவி இறந்த பிறகு அவர் செய்த கொலை சம்பவம் வெளியே வந்துள்ளது. யார் அவர்? எதற்காக அப்படி செய்தார்?
அமெரிக்காவைச் சேர்ந்தவர் லின் கீல்(58). இவருடைய முதல் மனைவி எலிசபெத்(42) கடந்த 2006ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார். அப்போது அவர் பனிக்கட்டிகளுக்கு நடுவே இருந்த தரைப்பகுதியில் விழுந்து தலையில் அடிப்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து 2007ஆம் ஆண்டு தன்னைவிட 20 வயது குறைந்த டையானா என்ற பெண்ணை கீல் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் வடக்கு காரோலினா பகுதியில் வசித்து வந்துள்ளனர்.
டையானாவிற்கு ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. அந்தக் குழந்தையுடன் கீலை திருமணம் செய்துள்ளார். டையானாவின் மகள் தற்போது 18 வயது முடிந்து கல்லூரியில் பயின்று வந்துள்ளார். டையானா ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் அவருடைய மகள் தன்னுடைய தாயை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். அதேபோல் மருத்துவமனையில் டையானாவுடன் பணிபுரியும் சக செவிலியர்களும் டையானாவை பணிக்கு வராதது தொடர்பாக மகளிடம் கேட்டுள்ளனர்.
இதனால் சற்று பதற்றம் அடைந்த அவர் காவல்துறையில் புகார் அளித்தார். இந்தப் புகாரை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் டையானாவின் நண்பர்கள் மட்டும் அவருடைய உறவினர்கள் அனைவரும் கணவர் கீல் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். ஏனென்றால் கீல் தன்னுடைய மனைவிடம் அடக்குமுறையை கையாள்பவராக இருந்துள்ளார். இதன்காரணமாக அவர் டையானாவிடம் அடிக்கடி சண்டை செய்ததும் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து காவல்துறையினர் தன்னுடைய மனைவியை காணவில்லை என்று ஏன் இதுவரை புகார் அளிக்கவில்லை என்று கீல் இடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர்,”என்னுடைய மனைவி இப்படி தான் அடிக்கடி சில நாட்கள் வீட்டிற்கு வராமல் இருப்பார். அதன்பின்னர் சில தினங்கள் கழித்து மீண்டும் வருவார்” என சாதாரணமாக கூறியுள்ளார். அவரின் பதில் காவல்துறையினருக்கு சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.
இந்த விசாரணைக்கு பிறகு மார்ச் 12ஆம் தேதி ஒரு பகுதியில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கிடைத்துள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த சடலத்தை மீட்டு அவர் அணிந்திருந்த திருமண மோதிரம் மூலம் டையானா என்பதை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். மேலும் உடற்கூர் ஆய்வில் அவர் பல முறை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.
காவல்துறையினர் கீலை பிடிக்க வந்தப் போது அவர் தப்பியுள்ளார். பின்பு தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு அவரை மெக்சிகோ நாட்டின் எல்லையில் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் முதலில் குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை. நீண்ட நேரத்திற்கு பிறகு அவர் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். டையானா பெயரில் 1 மில்லியன் டாலர் காப்பீட்டை கடந்த ஆண்டு இவர் எடுத்துள்ளார். அதன்பின்னர் இந்த ஆண்டு நடந்த சண்டையின் போது அவரை தலையில் அடித்தும் கத்தியால் குத்தியும் கொலை செய்துள்ளார்.
அவருடைய சடலத்தை ஒரு ஒதுக்குபுறமான இடத்தில் வீசியுள்ளார். இந்த வழக்கு கடந்த மாதம் நீதிமன்றத்தில் வந்தது. அந்த வழக்கின் தீர்ப்பு அன்மையில் வெளியாகியுள்ளது. அதன்படி லின் கீலிற்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் முதல் மனைவி எலிசெபத் இறப்பு தொடர்பாகவும் விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க: புயல்னா... இது தான்யா புயல்... இஸ்தான்புல்லை கதம் செய்யும் புயல்!