பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்கா என்ற மாகாணத்தில் உள்ள கிராமத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் பலர் சிக்கினர். இதையடுத்து, நிலச்சரிவில் சிக்கியிருக்கும் பலரை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். 


மீட்பு பணியில் தீவிரம்: 


தென் பசிபிக் தீவு நாடான போர்ட் மோர்ஸ்பியில் இருந்து சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கிராமத்தின் பெயர் காக்களம் என்று கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனத்திடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், 100க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 






100க்கு மேற்பட்டோர் உயிரிழப்பா..? 


இந்த நிலச்சரிவில் 100க்கு மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என அங்கு வசிக்கும் அக்கம்பக்கத்தை சேர்ந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், இந்த எண்ணிக்கை எவ்வளவு என்று அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் உடல்களை அப்பகுதி மக்கள் வெளியே எடுப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


சடலங்களை மீட்பதில் என்ன பிரச்சனை..? 


இந்த நிலச்சரிவு குறித்து போர்கேரா பெண்கள் வணிக சங்கத்தின் தலைசர் எலிசபெத் லருமா கூறுகையில், “நிலச்சரிவினால் பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் ஏராளமான கட்டடங்கள், மரங்கள் மற்றும் செடிகள் நிலச்சரிவில் சிக்கியுள்ளன. இதனால், புதையுண்ட இறந்தவர்களின் உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், மோசமான வானிலையால் மீட்புப் பணிகள் சற்று பாதிக்கப்பட்டன. இடிபாடுகளில் இருந்து உயிர் பிழைத்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்." என்று தெரிவித்தார். 






ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, நிலச்சரிவு மற்றும் இடிபாடுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்தும் முழு தகவலும் வெளியாகவில்லை. ஆனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 100 க்கும் அதிகமாக இருக்கலாம் என்று தெரிகிறது. நிலச்சரிவில் சிக்கிய மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். அதிகாலை 3 மணியளவில் மக்கள் தூக்கத்தில் இருந்தபோது திடீரென மலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மோசமான வானிலை காரணமாக, மழை பெய்தது மற்றும் குப்பைகளுடன், சேறும் மேலிருந்து வந்ததால், வீடுகள் இடிந்தன. தூங்கிக் கொண்டிருந்தவர்களும், அவர்களது உடமைகளும் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்தன. காயமடைந்தவர்கள் நிலச்சரிவு பற்றிய செய்தியை காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். தகவல் கிடைத்ததும் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், அதற்குள் 100க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்று தெரிவித்தது.