துருக்கி மற்றும் கம்போடியா நாட்டில் இந்தியர்களை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதில் ஒரு சம்பவம் மே 20 ஆம் தேதி நடந்த நிலையில் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு பரிமாறும் பணியில் இந்தியாவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் வேலை செய்து வந்தார். அவரிடம் மேற்கு நகரமான எட்ரின் நகரில் வேலை வாய்ப்பு இருப்பதாக கூறி பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 3 பேர் அழைத்துச் சென்றனர். 


அவர்களை நம்பி சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்ற பிறகு தான் இது அனைத்தும் நாடகம், தான் கடத்தப்பட்டுள்ளோம் என்ற உண்மை ராதாகிருஷ்ணனுக்கு தெரிந்துள்ளது. அவரது கைகளையும் கால்களையும் கட்டி அந்த பாகிஸ்தானிய நபர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அதனை வீடியோவாக எடுத்து இந்தியாவில் உள்ள குடும்பத்தினருக்கு அனுப்பி ரூ.20 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். உடனடியாக குடும்பத்தினர் காவல்துறையினருக்கு விஷயத்தை தெரிவிக்க 3 பேரும் கைது செய்யப்பட்டனர். 


அதேபோல் கம்போடியாவின் தலைநகர் புனோம் பென்னில்  இந்தியாவைச் சேர்ந்த முகமது சாத் மற்றும் சுதித் குமார் ஆகியோரை கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி பாகிஸ்தானிய நபர்கள் கடத்தினர். கிட்டதட்ட 3 வாரங்களாக இவர்கள் சிறைவைக்கப்பட்ட நிலையில்,  மே 16 ஆம் தேதி மீட்கப்பட்டுள்ளனர். 


கடத்தப்பட்ட காலக்கட்டத்தில் இருவரும் அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளது தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் சப்டைன் பின் நசீர் மற்றும் சயீத் அலி ஹுசைன் ஆகியோர் இருவரும் ஈடுபட்டுள்ளதை போலீசார் கண்டறிந்து கைது செய்தனர். கடத்தல்காரர்கள் இவர்கள் இருந்த அறையை பூட்டிவிட்டு பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு வெளியே சென்றுள்ளனர். அப்போது சாத் மற்றும் சுதீத் குமார் கூச்சலிடவே இவர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் பணியாளர் சந்தேகத்தின் பேரில் போலீஸூக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து இந்த கடத்தல் சம்பவம் முடிவுக்கு வந்துள்ளது.  


போலீசார் குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.