பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போர் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 7ஆம் தேதி, இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மோதல் தொடங்கியது. காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பு, 5,000 ராக்கெட்டுகளை கொண்டு இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது.


போரால் நிலைகுலைந்த காசா:


இதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில் பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் செய்து வரும் செயல் உலக மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தி வருவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.


இந்த தாக்குதலில் 4,137 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்னர். கொல்லப்பட்டவர்களில் 1,756 குழந்தைகளும் 976 பெண்களும் அடங்குவர். அதேபோல ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதுமட்டும் இன்றி, 200 பேரை ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதியாக பிடித்து வைத்துள்ளனர்.


போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என அரபு நாடுகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இஸ்ரேஸ் அதை மறுத்து வருகிறது. போரால் ஸ்தம்பித்துள்ள காசாவில் அத்தியாவசிய பொருள்கள் இன்றி அப்பாவி மக்கள் தவித்து வந்ததையடுத்து, மூடப்பட்டிருந்த எல்லை பகுதிகள் திறக்கப்பட்டு எகிப்து வழியாக இன்று முதல் தேவையான உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது.


போரை முடிவுக்கு கொண்டு வர எகிப்து முயற்சி:


இந்த நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் எகிப்து தலைநகர் கைரோவில் அமைதி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் மேற்காசிய நாடுகளின் தலைவரகள், மேற்குலக நாடுகளின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


இதில் கலந்து கொண்ட பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், "நாங்கள் வெளியேற மாட்டோம். எங்கள் நிலத்தில்தான் இருப்போம்" என பேசியுள்ளார். தொடர்ந்து பேசிய ஜோர்டான் மன்னர் அப்துல்லா, "இஸ்ரேலியர்களை விட பாலஸ்தீனியர்களின் உயிருக்கு உள்ள மதிப்பு குறைவு என மற்றவர்கள் நினைக்கிறார்கள்.


"இரு தரப்பிற்கும் ஆயுதங்கள் வழங்குவதை நாடுகள் தவிர்க்க வேண்டும்"


காசா, மேற்கு கரை மற்றும் இஸ்ரேலில் அப்பாவி பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைச் செயல்களால் வருத்தம் அடைந்துள்ளேன்.
அநீதியின் அடித்தளத்தில் ஒரு அரசு கட்டமைக்கப்பட்டால் அது ஒருபோதும் செழிக்காது என்பதை இஸ்ரேலிய தலைமை உணர்ந்து கொள்ள வேண்டும்.


உங்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் அமைதி மற்றும் பாதுகாப்பான எதிர்காலம் அமைய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இதை இஸ்ரேலியர்களுக்கு சொல்லி கொள்ள விரும்புகிறேன்" என்றார்.


பின்னர் பேசிய தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ரமபோசா, "இஸ்ரேல் - ஹமாஸ் மோதலின் இரு தரப்பிற்கும் ஆயுதங்களை வழங்குவதை நாடுகள் தவிர்க்க வேண்டும். சர்வதேச சட்டத்தை மீறி காசா பகுதிக்கு படைகளை அனுப்பி இஸ்ரேல் குண்டுவீசி வருகிறது" என்றார்.