அமெரிக்க, பிரிட்டன் நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போர், காசா பகுதியை நிலைகுலைய வைத்துள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே, கடந்த 7ஆம் தேதி மோதல் தொடங்கியது. 


இரு தரப்பிலும் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக, பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் வான்வழி தாக்குகதல் உலக மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியது. வான்வழி தாக்குதலை தொடர்ந்து, தற்போது நிலத்தின் வழியேயும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.


கொத்து, கொத்தாக கொல்லப்படும் அப்பாவி மக்கள்:


காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை, 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனயர்கள் கொல்லப்பட்டுள்ளனர். போரில் கொல்லப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகளும் பெண்களும் ஆவர். போர் நிறுத்தத்தை அறிவிக்கக் கோரி உலக நாடுகளும் ஐநாவும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், போரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதில் இஸ்ரேல் முனைப்பு காட்டி வருகிறது.


போரில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்பது சர்வதேச விதி. ஆனால், காசா பகுதியில் குழந்தைகளும் பெண்களும் சர்வசாதாரணமாக கொல்லப்பட்டு வருகின்றனர் என்றும் சர்வதேச விதிகளை மீறி போர் குற்றம் நிகழ்த்தப்பட்டு வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.


குறிப்பாக, காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் மனதை பதற வைக்கும் வகையில் அமைந்தது. போரில் உடைமைகளை இழந்து, காயம் அடைந்து, மருத்துவமனைக்கு வந்த மக்கள் மீதும் எந்த விதி ஓய்வும் இன்றி சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் மனித உரிமை வரலாற்றில் இருண்ட பக்கங்களாக பதிவாகியுள்ளது. இந்த தாக்குதலில் மட்டும் 500 பேர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.


மனதை உலுக்கும் சம்பவம்:


காசாவில் போர் விதிகள் மீறப்பட்டு வருவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், மனதை உலுக்கும் வகையில் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. போரில் நடத்தப்பட்ட தாக்குதலால் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய குழந்தையை மீட்பு படை வீரர் காப்பாற்றும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.


அதில், இடிபாடுகளில் புதைந்த குழந்தையின் உடலை மீட்பு படை வீரர் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே எடுக்கிறார். குழந்தையை காப்பாற்றிவிட்டு, அந்த மீட்பு படை வீரர் கதறி அழுகிறார். பார்க்கும் போதே நம் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது. 


 






ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு ஒட்டுமொத்த பாலஸ்தீனியர்களையும் தண்டிப்பதா? என ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் சமீபத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.


போர் நிறுத்தம்:


ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அவசர கூட்டத்தில், காசாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.  ஜோர்டான் கொண்டு வந்த தீர்மானத்திற்கு பெரும்பாலான நாடுகளின் ஆதரவு கிடைத்தது.


தீர்மானத்திற்கு ஆதரவாக பிரேசில், சீனா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிங்கப்பூர், சவுதி அரேபியா உள்ளிட்ட 120 நாடுகள் வாக்களித்த நிலையில், தீர்மானத்திற்கு எதிராக இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட 14 நாடுகள் வாக்களித்தன. இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், உக்ரைன், பிரிட்டன் உள்ளிட்ட 45 நாடுகள் தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.