பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை, 8,000 பாலஸ்தீனயர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள், பெண்கள் ஆவர். காசாவில் நடந்து வரும் போரால் உடைமைகளை இழந்து சிக்கித் தவித்து வரும் மக்களுக்கு டிரக் மூலம் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை ஐநா வழங்கி வந்தது. ஆனால், தற்போது எரிபொருள் காலியாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், அவசர உதவி தடைபடும் சூழல் உருவாகியுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. 






இஸ்ரேலின் தொடர் தாக்குதல் உலக நாடுகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அங்கு சிக்கித் தவிக்கும் மக்களுக்கான அடிப்படை வசதிகளை உறுதி செய்திட வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஐ.நா பொதுச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் ஐ.நா பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டெரஸ் 5 நாள் பயணமாக நேபாளத்திற்கு வருகை தந்துள்ளார். காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 10 நேபாள மாணவர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர் தனது எக்ஸ் தளத்தில் இரங்கலை தெரிவித்தார்.


மேலும், "பொதுமக்களின் பாதுகாப்பு என்பது முதன்மையானது. மனித உயிர்களை பாதுகாக்க வேண்டும் என்றும், மனிதாபிமான தேவைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் அந்த விதிகளை யாருக்காகவும் மாற்ற முடியாது என்றும்” பதிவிட்டுள்ளார்.






 


இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ”காசாவின் முன்னேற்றங்கள் குறித்து பிரதமர் நெதன்யாகுவுடன் நான் பேசினேன்.  பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சிகள் மற்றும் காசாவில் உள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பாக வெளியேற உதவுவது குறித்து நாங்கள் விவாதித்தோம். மேலும் காசாவில் உள்ள குடிமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை உடனடியாக வழங்குவதோடு, கணிசமாக அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை நான் அடிக்கோடிட்டுக் காட்டினேன்.  பயங்கரவாதத்திலிருந்து தனது குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு முழு உரிமையும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு இணங்குவதற்கான பொறுப்பும் உள்ளது என்பதை நான் மீண்டும் வலியுறுத்தினேன்” என குறிப்பிட்டுள்ளார்.


 






 இது ஒரு பக்கம் இருக்க இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகிறது. வான் வழி தாக்குதல் நடத்தி வந்த நிலையில், தரைவழி தாக்குதலை தொடங்கியது. நேற்றைய தினம் இஸ்ரேல் பிரதமர் கடற்படை வீரர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், “ இஸ்ரேல் மக்களின் அதீத அன்பை நீங்கள் பெற்றுள்ளீர்கள். இஸ்ரேல் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உங்கள் பணி அமைந்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.