ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி, உலகின் மிக உயரமான கட்டிடமான துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவில் மூவர்ண கொடியால் மின்னும். இதேபோல், இரவு 12 மணியளவில் அவர்களது சுதந்திர தினவிழாவில் பாகிஸ்தான் கொடியானது (ஆகஸ்ட் 14) புர்ஜ் கலீஃபாவில்  காட்டப்படும் என்று எதிர்பார்த்த நூற்றுக்கணக்கான பாகிஸ்தானியர்கள் ஏமாற்றம் அடைந்து கொந்தளித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


துபாய் - புர்ஜ் கலீஃபா:


நள்ளிரவு, புர்ஜ் கலீபாவின் அருகே நூற்றுக்கணக்கான பாகிஸ்தானியர்கள் நிற்கின்றனர். சரியாக 12 மணிக்கு புர்ஜ் கலீபா கட்டிடத்தில் பாகிஸ்தான் தேசியக் கொடி காட்டப்படும் என எதிர்பார்த்தனர். இருப்பினும், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், நள்ளிரவுக்குப் பிறகு சில நிமிடங்களுக்குப் பிறகும் உலகின் மிக உயரமான கட்டிடத்தில் எந்த காட்சியும் திரையிடப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பாகிஸ்தானை சேர்ந்த பொதுமக்கள் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' போன்ற கோஷங்களை எழுப்ப தொடங்கினர். இந்த முழு சம்பவத்தையும் பதிவு செய்யும் பெண்ஒருவர், "இப்போது நேரம் 12:01 மணி, பாகிஸ்தான் தேசியக் கொடி புர்ஜ் கலிஃபாவில் காட்டப்படாது என்று துபாய் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, பாகிஸ்தானியர்களும் கோஷமிடுவதைக் காணலாம். புர்ஜ் கலீஃபாவில் பாகிஸ்தான் கொடி காட்டப்படாதது மிகுந்த வேதனை அளிக்கிறது. இதன்மூலம், இவர்கள் அனைத்து பாகிஸ்தானியர்களையும் கேலி செய்தது போல் ஆகிவிட்டது” என்று பதிவிட்டு இருந்தார். 






தொடர்ந்து, புர்ஜ் கலீஃபாவில் அவர்களது பாகிஸ்தான் தேசிய கொடி ஒளிரும் என எதிர்பார்த்த பாகிஸ்தானியர்கள், ஏமாற்றமடைந்து அந்த இடத்தை விட்டு நகர்வதையும் வீடியோவில் காணலாம். 


பாகிஸ்தான் சுதந்திர தினம்: 


பாகிஸ்தான் நாடானது இன்று தனது 77வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. கடந்த 1947 ம் ஆண்டு இந்தியா பிரிக்கப்பட்டபோது தென்கிழக்கு ஆசிய நாடு உருவானது. 1947, ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி நள்ளிரவில் இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றன. ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவும், ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தான் நாடும் தங்களது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர்.






இந்தியா நாடு பிரிக்கப்பட்டபோது பாகிஸ்தான் - மேற்கு பாகிஸ்தான் மற்றும் கிழக்கு பாகிஸ்தான் என உருவாக்கப்பட்டது. இருப்பினும் இந்த இரண்டு நாடுகளும் ஒற்றுமையாக இல்லை. இதையடுத்து, கடந்த 1971ம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தான் நாடானது கடுமையான போராட்டத்திற்கு பிறகு சுதந்திரம் அடைந்து வங்காளதேசம் என்ற புதிய நாடாக உருவானது.