கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துகளை கொண்டுள்ள உலகின் மிகப்பெரிய பணக்கார அரச குடும்பங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் அறியலாம்.


பணக்கார அரசு குடும்பங்கள்:


உலகம் முழுவதும் பல பெரும் பணக்காரர்கள் இருந்தாலும், அரசு மரியாதையுடன் பெரும் சொத்துகளை கொண்டிருப்பவர்கள் மீது எப்போதுமே தனிக்கவனம் உண்டு. அவர்களின் ஆடம்பரமான வாழ்க்கை முறை, பிரமிக்கச் செய்யும் அரண்மனைகள் மற்றும் அவர்களின் ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்யும் பணியாளர்கள், நம்மை பிரமிக்க வைக்கிறது. இந்நிலையில் உலகெங்கிலும் உள்ள 5 பணக்கார அரச குடும்பங்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


05. இங்கிலாந்து குடும்பம்:


இங்கிலாந்து அரசு குடும்பம் மிகவும் பழமையான மற்றும் சர்வதேச அளவில் அனைவராலும் அறியப்பட்ட அரச குடும்பம். கடந்த ஆண்டு வெளியான ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, இங்கிலாந்து அரசு குடும்பம் 88 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது 7.3 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை கொண்டுள்ளது. இதில் பெரும்பாலானவை அரசு குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தின் மூலம் வரும் வருவாய் ஆகும். 


04. அபுதாபி அரச குடும்பம்:


உலகின் பணக்கார அரச குடும்பங்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பது அபுதாபி அரச குடும்பம். கடந்த 2004ம் ஆண்டு முதல் அங்கு அரசராகவும் அந்த நாட்டின் அதிபராகவும் இருப்பவர் ஷேக் கலிபா  பின் சையத் அல் நஹயன். இவரது குடும்பத்திற்கு 150 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.12 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இதில் பெரும்பலான வருமானம் அரசு குடும்பத்திற்கு சொந்தமான அரசு எண்ணெய் நிறுவனங்களில் இருந்து கிடைக்கப்பெறுகிறது. 


03. கத்தார் அரச குடும்பம்:


இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பது கத்தார் அரச குடும்பம். இந்த குடும்பத்தின் தலைவராக தற்போது இருப்பவர் ஷேக் தமிம் பின் ஹமத் தனி. இவர் அரச குடும்பத்தைச் சேர்ந்த டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில், 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சொத்துகளுடன் 9வது இடத்தில் உள்ளார். அதேநேரம், கத்தார் அரச குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 335 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 27 லட்சம் கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டிஃபானி & கோ, எம்பைர் ஸ்டேட் பில்டிங் மற்றும் வோல்க்ஸ்வாகன் ஆகிய நிறுவனங்களின் பெரும்பான்மை பங்குகளை அரசு குடும்பம் தங்கள் வசம் கொண்டுள்ளது.


02. குவைத் அரச குடும்பம்:


குவைத் அரசின் தலைவராகவும், நாட்டின் ராணுவ தளபதியாகவும் இருப்பவர் சபா அல்-ஹமத். இவரது குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 360 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 30 லட்சம் என கூறப்படுகிறது. இந்த அரசு குடும்பத்தின் பெரும்பாலான வருவாய் எண்ணெய் கிணறுகள் மற்றும் அமெரிக்க பங்குச்சந்தையில் செய்துள்ள முதலீடுகள் மூலம் கிடைக்கப்பெறுகிறது. 


01. சவுதி அரேபிய அரச குடும்பம்:


உலகின் பணக்கார அரச குடும்பங்களின் பட்டியலில் யாராலும் அசைக்க முடியாமல் சவுதி அரேபிய அரச குடும்பம் முதலிடத்தில் உள்ளது. சுமார் 15 ஆயிரம் பேரை குடும்ப உறுப்பினரகளாக கொண்ட இந்த அரச குடும்பத்தின் தற்போதைய தலைவராக இருப்பவர் சல்மான் பின் அப்துலாஜிஜ் அல் சாத். இந்த குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 1.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ஒரு கோடியே 16 லட்சம் கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இவர்களின் பெரும்பாலான வருமானம் எண்ணெய் கிணறுகளில் இருந்து கிடைக்கப்பெறுகிறது.