பாகிஸ்தான் நாட்டின் எம்.பி.யாக பொறுப்பு வகிப்பவர் அஸாம் ஸ்வாதி. இவர் தனது மனைவிக்கு ஒரு ஆட்சேபனைக்குரிய வீடியோ அனுப்பப்பட்டிருப்பதாகவும் அதில் தானும் தனது மனைவியும் இருக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவேத் பஜ்வாவை விமர்சித்ததை அடுத்த, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளரான அசம் கான் ஸ்வாதி, கடந்த மாதம் கூட்டு விசாரணை அமைப்பால் (எஃப்ஐஏ) கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். காவலில் வைக்கப்பட்டபோது தான் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், உதைக்கப்பட்டதாகவும், கேலி செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பில் உணர்ச்சிவசப்பட்ட ஸ்வாதி, செய்தியாளர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றிக் கூறினார். கண்ணீர் விட்டு கதறிய அவர், யாரோ தெரியாத எண்ணில் இருந்து தனக்கு வீடியோ அனுப்பியதாக அவரது மனைவி நேற்று இரவு தன்னிடம் தெரிவித்ததாகக் கூறினார்.
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "எனது நாட்டின் மகள்களும் பேத்திகளும் கேட்டு கொண்டிருக்கின்றனர். என்னால் மேற்கொண்டு எதுவும் சொல்ல முடியாது" என்றார். தானும் தனது மனைவியும் குவெட்டாவுக்குச் சென்றபோது இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்றும், அரசில் இருப்பவர்களே தனது பிரச்னைகளுக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், அந்த வீடியோ போலியானது என்றும் வீடியோ போட்டோஷாப் செய்யப்பட்டது என்றும் கூட்டு விசாரணை அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து விசாரணை அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், முறையான விசாரணை தேவை. அவர் முறையாக புகார் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதை கண்டித்துள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான், "வலி, வேதனை மற்றும் அவமான உணர்வை அனுபவித்து வரும் ஸ்வாதியிடம் பாகிஸ்தான் சார்பில் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.