பாகிஸ்தானில் 16-வது தேசிய சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதி பொதுத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இந்த தேர்தலில், கைபர் பக்துன்க்வாவின் புனர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து பெண் ஒருவர் முதல் முறையாக பொதுத் தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சவேரா பிரகாஷ், புனர் மாவட்டத்தில் பிகே-25 பொது இடத்துக்கு அதிகாரப்பூர்வமாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இந்து சமூகத்தைச் சேர்ந்த சவேரா பிரகாஷின் தந்தை ஓம் பிரகாஷ், ஓய்வு பெற்ற மருத்துவர் ஆவார். இவர் கடந்த 35 ஆண்டுகளாக பாகிஸ்தான் மக்கள் கட்சியில் (பிபிபி) உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில், சவேரா பிரகாஷும் தந்தை ஓம் பிரகாஷை பின்பற்றி தற்போது பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) சார்பில் தேர்தலில் போட்டியிடத் தயாராகி வருகிறார்.
சவேரா பிரகாஷ்:
சவேரா பிரகாஷ், அபோதாபாத் சர்வதேச மருத்துவக் கல்லூரியில் 2022-இல் பட்டம் பெற்றவர். மேலும் இவர் புனரில் உள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சி மகளிர் பிரிவின் பொதுச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். சவேரா பிரகாஷ் மகளிர் பிரிவு பொதுச் செயலாளராக பணிபுரியும்போதே சமூகம் சார்ந்து பல்வேறு விஷயங்களில் பங்கேற்றுள்ளார்.
அதிலும், குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்திற்காக பாகிஸ்தானில் குரல் கொடுத்தவர். இதுபோல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கும் பணியிலும், வளர்ச்சித் துறையில் பெண்கள் வரலாற்று ரீதியாக புறக்கணிக்கப்படுவதையும் ஒடுக்குவதில் இருந்தும் தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பேன் என தெரிவித்தார்.
நேற்று (டிசம்பர் 25) குவாமி வதன் கட்சியுடன் தொடர்புடைய கைபர் பக்துன்க்வாவின் உள்ளூர் தலைவர் சலீம் கான் உள்ளூர் ஊடகங்களுக்கு அளித்த தகவலின்படி, வரவிருக்கும் தேர்தலில் பனரில் இருந்து பொதுத் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த முதல் பெண் சவேரா பிரகாஷ் என்று தெரிவித்தார். தற்போது இந்த செய்திகள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறார்.
இதுகுறித்து உள்ளூர் தலைவர் சலீம் கான் அளித்த பேட்டியில், ”பாகிஸ்தானில் பொது இடங்களுக்கான பெண் வேட்பாளர் சவேரா பிரகாஷ், தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, அப்பகுதியின் பின்தங்கிய மக்களுக்காக பாடுபடுவேன் என்று கூறினார். அவர் கடந்த டிசம்பர் 23ம் தேதி தனது வேட்புமனுவை சமர்ப்பித்தார். மேலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி மூத்த தலைமை தனது வேட்புமனுவை ஆதரிக்கும் என்று நம்பிக்கை” என அவர் தெரிவித்ததாக சலீம் கூறினார்.
மருத்துவ குடும்பத்தை சேர்ந்த சவேரா பிரகாஷ் கூறுகையில், ”மனித நேயத்திற்கு சேவை செய்வது என் ரத்தத்தில் உள்ளது. மருத்துவப் படிப்பின போது, எம்.எல்.ஏ., ஆக வேண்டும் என்பது எனது கனவு. அரசு மருத்துவமனைகளில் மோசமான நிர்வாகம் மற்றும் உதவியற்ற தன்மையை அகற்ற வேண்டும் என்று விரும்புகிறேன்” என தெரிவித்தார்.
பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் (ECP) சமீபத்திய திருத்தங்கள், பொது இடங்களில் ஐந்து சதவீத பெண் வேட்பாளர்களை சேர்த்துக் கொள்வது கட்டாயமாக்குகிறது.