கடந்த டிசம்பர் 18ஆம் தேதி வடமேற்கு சீனாவில் ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது, மேலும் இரண்டு பேரைக் காணவில்லை என ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 



சீனாவின் வடமேற்கு பகுதியில் ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கும் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சீனாவின் முக்கிய ஜிஷிஷான் கவுண்டி, கன்சு மாகாணம் மற்றும் அதன் அருகில் உள்ள கிங்காய் மாகாணத்தின் மின்ஹே கவுண்டியில் பலத்த பாதிப்புகளை ஏற்படுத்தியது.  இதனான் பலர் உயிரிழந்திருக்ககூடும் என தொடக்கத்தில் அச்சப்பட்டனர். இதுமட்டும் இல்லாமல் இந்த நிலநடுக்கத்தினால் மிகவும் பிரமாண்டமான கட்டிடங்கள் தொடங்கி பழமையான கட்டிடங்கள் வரை பெரும்பாலான கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளது.  பலத்த உயிரிழப்புகளையும் அழிவையும் ஏற்படுத்தியது. கிங்காய் மாகாணத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது, மேலும் இரண்டு பேர் இன்னும் காணவில்லை என்று கிங்காய் அவசர மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. காணாமல் போன இருவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 






இந்த நிலநடுக்கத்தினால் அதிகம் பாதிப்புக்கு உள்ளான மாகாணம் என்றால் அது கன்சு மாகாணம்தான். இந்த  மாகாணத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 117. இதுமட்டும் இல்லாமல் 781 பேர் காயமடைந்துள்ளனர்.  இதில் சுமார் 500 பேர் காயத்தில் இருந்து ஓரளவுக்கு குணமாகி மருத்துவமனையில் இருந்து வெளியேறி தங்களது உறவினர்கள் வீடுகளிலும் சீன அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள நிவாரண முகாம்களிலும் தங்கி வருகின்றனர்.  மேலும் 282 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 17 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது மற்றும் 69 பேர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. 


வீடுகளை இழந்த மக்கள்


இந்த நிலநடுக்கம் தொடர்பாக ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானதாக சீன அரசு தெரிவித்தது. இந்த மோசமான நிலநடுக்கத்தினால் சீனாவில் பாதிப்புக்குள்ளான மாகாணங்களில் சுமார் 14 ஆயிரம் வீடுகள் தரைமட்டமாகி உள்ளது. இதனால் கிட்டத்தட்ட 87 ஆயிரம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதுமட்டும் இல்லாமல் 500 தற்காலிக வீடுகள் ஏற்படுத்தப்பட்டு அவற்றிலும் மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த நிலநடுக்கத்தில் பாதிப்புக்குள்ளான பள்ளிகள் கல்லூரிகளில் இன்னும் வகுப்புகள் முறையாக தொடங்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது. 


சீனப் பிரதமர் லி கியாங் கடந்த 23ஆம் தேதி கன்சுவில் உள்ள பல கிராமங்களுக்கும், கிங்காயில் உள்ள ஒரு கவுண்டிக்கும் சென்று, நிலநடுக்கத்தால் பாதிப்படைந்தவர்களின் நிலைமைகளை சீராக்க அதிகாரிகளை வலியுறுத்தினார் என்று அதிகாரப்பூர்வ சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. குளிர்காலத்தில் மக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதே நிவாரண முயற்சிகளின் முதன்மையான முன்னுரிமை என்று லி கியாங் கூறியுள்ளார்.