பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பிரபலமான ஞாயிறு பஜாரில் நேற்று (புதன்கிழமை) ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தில் கிட்டத்தட்ட 300 கடைகள் எரிந்ததாக தகவல்கள் பெறப்பட்டுள்ளன. 


பல மணி நேரம் போராடி அணைப்பு


பல்வேறு ஊடக அறிக்கைகளின்படி, பஜாரின் கேட் எண் 7 க்கு அருகில் இந்த தீ விபத்து தொடங்கி பல கடைகளுக்கு பரவியதாகத் தெரிகிறது. 10 தீயணைப்பு வாகனங்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களுக்கு பாகிஸ்தான் விமானப்படையின் இரண்டு தீயணைப்பு வீரர்களும் உதவியுள்ளனர். இந்த நிலையில், இச்சம்பவத்தைத் தொடர்ந்து உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல்கள் கிடைத்துள்ளன. தீயின் அளவு மிகவும் பெரியதாக இருந்தது என்றும், அது வேகமாக கடைகளை மூழ்கடித்து நொடி பொழுதில் 300 க்கும் மேற்பட்ட கடைகளுக்கு பரவியதாக கூறப்படுகிறது.



வாரச்சந்தை வரலாறு


1980 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட செக்டர் எச்-9 வாரச்சந்தையானது 25 ஏக்கர் நிலத்தில் 2,760 ஸ்டால்கள் மற்றும் கடைகளுக்கான திறன் கொண்டது. வாரத்திற்கு மூன்று முறை செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் பஜார் நடைபெறும், ஆனால் உள்ளூரில் ஞாயிறு பஜார் என்று மட்டுமே அழைக்கப்படுகிறது. மளிகைப் பொருட்கள், பழங்கள், காய்கறிகள், பழைய உடைகள், தரைவிரிப்புகள் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கான பல பொருட்களை வாங்குவதற்கு நகரத்தின் அனைத்து வகையான மக்களும் இங்கு அடிக்கடி வந்து செல்கின்றனர்.


தொடர்புடைய செய்திகள்: Gujarat, Himachal Pradesh election result LIVE: குஜராத், இமாச்சலில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் பாஜக; தடுமாறும் காங்கிரஸ்; சோடை போன ஆம் ஆத்மி..!


300 கடைகள் எரிந்து நாசம்


தொடர்ந்து பல மணி நேரம் போராட வேண்டி இருந்ததால் அதற்குள் 300 கடைகளும் எரிந்தது சாம்பலானதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா கான் கவன ஈர்ப்புச் செய்து மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை கேட்டு மீட்புப் பணியை கண்காணிக்க துணை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார். 



இதற்கு முன் ஏற்பட்ட தீ விபத்துக்கள்


பஜாரை நோக்கி செல்லும் அனைத்து வழிகளும் காவல்துறையினரால் சீல் வைக்கப்பட்டுள்ளன. ட்விட்டரில், இஸ்லாமாபாத் காவல்துறை, ஸ்ரீநகர் நெடுஞ்சாலையின் அருகிலுள்ள பகுதியை பாதுகாப்பாக வைத்திருக்கவும், மீட்புத் துறைக்கு ஒத்துழைக்கவும் குடிமக்களுக்கு அறிவித்தது. மேலும், போக்குவரத்து 9வது அவென்யூ நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது. நகரின் ஜி-9 பகுதியில் அமைந்துள்ள பஜாரில் ஏற்கனவே தீ வெடித்த வரலாறு உள்ளது. அக்டோபர் 2019 இல், அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இதே போல 300க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமானது குறிப்பிடத்தக்கது. ஜூலை 2018 இல், நடந்த தீ விபத்தில் ஆடை மற்றும் உள்ளாடை பிரிவில் குறைந்தது 90 கடைகள் எரிந்தன. அதற்கு ஒரு ஆண்டு முன்பு ஆகஸ்ட் 2017 இல், ஒரு உள்ளாடைக் கடையில் சூரிய சக்தியால் இயங்கும் பேட்டரி வெடித்ததால் பஜாரின் E மற்றும் F பிரிவுகளில் தீ விபத்து ஏற்பட்டது.