நீதிபதி ஆலியா நீலம் பாகிஸ்தானில் புதிய வரலாறு ஒன்றை படைத்துள்ளார். அவர் லாகூர் உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு அந்நாட்டின் குடியரசுத் தலைவர் ஆசிஃப் அலி ஜர்டாரி ஒப்புதல் வழங்கியுள்ளார். 


அவரது நியமனத்தை உறுதி செய்து, பாகிஸ்தான் சட்ட அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு அரசியலமைப்பின் 193 வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, லாகூர் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஆலியா நீலம் அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்திற்கு பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக, லாகூர் உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பொறுப்புக்கு 3 நீதிபதிகள் சீனியாரிட்டி பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். அதில் ஆலியா நீலம்  மூன்றாவது இடத்தில் இருந்தார். இதையடுத்து நீலத்தின் பதவி உயர்வுக்கு பாகிஸ்தான் தலைமை நீதிபதி காசி ஃபேஸ் இசா தலைமையிலான பாகிஸ்தானின் நீதித்துறை ஆணையம் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. 






நீதிபதி நீலம், லாகூர் உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி என்றாலும், பாகிஸ்தானின் எந்த மாகாணத்திலும் பதவியை வகிக்கும் இரண்டாவது பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.


அவருக்கு முன், நீதிபதி சையதா தாஹிரா சப்தர் புதிய மைல்கல்லை எட்டியிருந்தார். அவர் 2018-ல் பலுசிஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 


இதைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதிபதி ஆயிஷா ஏ மாலிக் என்பது அவர் செய்த மற்றொரு வரலாற்று சாதனையாகும்.


யார் இந்த நீதிபதி ஆலியா நீலம்


1966ஆம் ஆண்டு நவம்பர் 12-ல் பிறந்த நீதிபதி நீலம், 1995 ஆம் ஆண்டு பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் தனது வழக்கறிஞர் பட்டம் பெற்றார். 1996 ஆம் ஆண்டு தன்னை வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டார். தொடர்ந்து, 2008 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞராகப் பதிவு செய்யப்பட்டார். 


2013ஆம் ஆண்டு லாகூர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பேற்று இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்தார். இந்நிலையில்தான் தற்போது தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.