PM Narendra Modi: பிரதமர் மோடி ஆஸ்திரியாவில் உள்ள, இந்திய சமூகத்தினரிடையே உரையாடும்போது, இந்தியா எப்போதும் அமைதியையும், வளர்ச்சியையும் தருவதாக பேசினார்.


ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி:


மூன்று நாள் பயணமாக வெளிநாடு சென்ற பிரதமர் மோடி, ரஷ்ய அதிபரை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து ஆஸ்திரியா சென்ற அவர், அதிபர் அலெக்சான்டர் வாண்டர் பெல்லன் மற்றும் பிரதமர் கார்ல் நெகம்மரை சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து, வியன்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அங்குள்ள இந்திய சமூகத்தினர் இடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.


பிரதமர் மோடி பெருமிதம்


நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவில் நடந்த தேர்தல், உலகம் முழுவதும் உள்ள மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சில வாரங்களுக்கு முன் நடந்த தேர்தலில் 65 கோடிக்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர். கற்பனை செய்து பாருங்கள், இவ்வளவு பெரிய தேர்தல் செயல்முறை நடைபெறுகிறது, ஆனால் சில மணி நேரங்களுக்குள் தேர்தல் முடிவுகள் தெளிவாகத் தெரிகிறது. இது நமது தேர்தல் முறை மற்றும் ஜனநாயகத்தின் பலமாகும்.  இந்தியாவில் நூற்றுக்கணக்கான அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 8000 க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த அளவிலான போட்டி, இது நமது பன்முகத்தன்மையை காட்டுகிறது.  இத்தகைய தேர்தலுக்குப் பிறகுதான் பொதுமக்கள் அதன் ஆணையை வழங்கினர். 60 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றோம். கோவிட்டிற்குப் பிந்தைய காலத்தில்,  உலகெங்கிலும் உள்ள அரசியல் ஸ்திரத்தமின்மை இன்றி இருந்தது. அது போன்ற ஒரு சூழ்நிலையில், இந்திய மக்கள் என் மீதும், என் கட்சி மீதும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மீதும் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்தியா ஸ்திரத்தன்மையையும் தொடர்ச்சியையும் விரும்புகிறது என்பதற்கு இந்த உத்தரவு சான்றாகும். இந்த தொடர்ச்சியே கடந்த 10 ஆண்டுகளின் கொள்கை மற்றும் திட்டங்களின் தொடர்ச்சியாகும். இந்தத் தொடர்ச்சியே நல்லாட்சி, இந்தத் தொடர்ச்சி என்பது பெரிய தீர்மானங்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகும்.


மக்களின் பங்களிப்பு அவசியம்:


இரு நாடுகளுக்கு இடையேயான உறவு, அரசுகளால் மட்டும் உருவாக்கப்படுவதில்லை. உறவுகளை வலுப்படுத்த பொதுமக்களின் பங்களிப்பு அவசியம். அதனால் தான், இந்த உறவுகளில் உங்களின்  பங்கு மிகவும் முக்கியமானது. இந்தியாவைப் போலவே, ஆஸ்திரியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரம் மிகவும் பழமையானது மற்றும் மகத்தானது. நமது நாடுகளுக்கு இடையேயான உறவானது வரலாற்று சிறப்புமிக்கது. இது இரு நாடுகளுக்கும் பயனளித்தது. இந்த நன்மை கலாச்சாரம் மற்றும் வர்த்தகம் தொடர்பானது.


புத்தத்தை கொடுத்தோம், யுத்தத்தை அல்ல - மோடி


உலகம் முழுவதும், இன்று இந்தியா என்ன நினைக்கிறது, இந்தியா என்ன செய்கிறது என இந்தியாவைப் பற்றி நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன.  எனவே,  சிறந்த அறிவுள்ள உலகத்தை உருவாக்குவது அவசியம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகத்துடன் அறிவையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளோம். இந்தியா கொடுத்தது யுத்தத்தை அல்ல 'புத்த'-த்தை என்று பெருமையுடன் சொல்லலாம். புத்தரைப் பற்றி நான் பேசும்போது, ​​இந்தியா எப்போதும் அமைதியையும் செழிப்பையும் கொடுத்துள்ளது என்று அர்த்தம். அதனால்தான், 21ஆம் நூற்றாண்டிலும் இந்தியா தன்னிடம் உள்ள இந்தப் பங்கை வலுப்படுத்தப் போகிறது. இன்று இந்தியாவை 'விஷ்வ பந்து' என்று உலகம் பார்க்கும்போது, ​​அது நமக்குப் பெருமையாக இருக்கிறது. 


மோடி அரசின் இலக்கு:


இன்று இந்தியா 8% வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த வேகத்தில் நாம் முதல் 3 இடங்களை (உலகின் பொருளாதாரம்) அடைவோம் என்று நான் மக்களிடம் கூறியிருந்தேன். எனது மூன்றாவது பதவிக்காலத்தில், நான் நாட்டை உலகின் முதல் 3 பொருளாதார இடங்களுக்கு கொண்டு செல்வேன். எங்கள் நோக்கம் 2047. நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் ஆகிறது, ஆனால் அது விக்சித் பாரதத்தின் நூற்றாண்டாக இருக்கும்.  அடுத்த 1000 ஆண்டுகளுக்கான வலுவான அடித்தளத்தை இந்தியாவிற்கு நாங்கள் அமைத்து வருகிறோம்” என மோடி தெரிவித்தார்.


இந்திய சமூகத்தினர் உடனான உரையாடலுடன், பிரதமர் மோடியின் 3 நாள் வெளிநாட்டு பயணம் நிறைவடைந்தது. தொடர்ந்து, ஆஸ்திரியாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மோடி தாயகம் புறப்பட்டார்.