பிரிட்டன் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள், ஒரு குறிப்பிட்ட பிராண்டை தொடர்ந்து பயன்படுத்தினால், அக்குறிப்பிட பிராண்டுக்கு ராஜ குடும்பத்தின் அங்கீகாரம் வழங்கப்படுவது வழக்கம்.
தற்போது, பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமாகி உள்ளதால், அவருக்கு பிடித்தமான 600 பிராண்டுகள், ராஜ குடும்பத்தின் அங்கீகாரத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ராஜ குடும்பத்தின் அடுத்த வாரிசான மூன்றாம் சார்லஸின் ஒப்புதலுக்காக இந்த பிராண்டுகள் காத்து கிடக்கின்றன.
ஃபோர்ட்னம் அண்ட் மேசன் டீ, பர்பெர்ரி ரெயின்கோட்டுகள், கேட்பரி சாக்லேட், துடைப்பம் மற்றும் நாயின் உணவு உற்பத்தியாளர்கள் கூட அரச கௌரவத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் புதிய மன்னரின் ஒப்புதலை பெறவில்லை என்றால், அரசு குடும்பத்திற்கு விருப்பமான சப்ளையர்கள் எனக் குறிக்கும் முத்திரையை இரண்டு ஆண்டுகளுக்குள் அகற்ற வேண்டியிருக்கும்.
முன்னதாக, வேல்ஸ் இளவரசராக இருந்தபோது, மன்னர் சார்லஸ் 150க்கும் மேற்பட்ட பிராண்டுகளுக்கு அங்கீகாரத்தை வழங்கினார். எல்லாத்துக்கும் மேலாக, இந்த அரச அங்கீகாரம் என்பது தரத்தையே குறிக்கிறது. இதுகுறித்து அரச அங்கீகாரத்தை கொண்டுள்ள பிராண்டுகளின் சங்கம், " அரச அங்கீகாரத்தை வைத்திருப்பவர்கள் தங்கள் தயாரிப்பு, பேக்கேஜிங், எழுதுபொருட்கள், விளம்பரம், வளாகம் மற்றும் வாகனங்களில் அதற்கான குறியீட்டை அச்சடிப்பதற்கான உரிமையை பெறுவார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளது.
சில நிறுவனங்களுக்கு, ராயல் அங்கீகாரம் ஒரு பொருள்களை விற்பதற்கான விளம்பரமாக உள்ளது. இருப்பினும், அது, விற்பனையில் எந்த அளவுக்கு உண்மையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை கணக்கிடுவது கடினம்தான்.
ஃபோர்ட்னம் மற்றும் மேசன் பிராண்டுதான், மகாராணி எலிசபெத்திற்கு மளிகை பொருள்களை சப்ளை செய்து வந்தது. வேல்ஸ் இளவரசருக்கு டீ மற்றும் மளிகை பொருள்களை சப்ளை செய்து வருகிறது. இதுகுறித்து புகழ்பெற்ற பல்பொருள் அங்காடியான ஃபோர்ட்னம் மற்றும் மேசன் கூறுகையில், "1954 ஆம் ஆண்டு முதல் மகாராணியிடம் இருந்து வாரண்ட் பெற்றதற்கும், அவரது வாழ்நாள் முழுவதும் அவருக்கும் அரச குடும்பத்துக்கும் சேவை செய்ததற்கும் நாங்கள் பெருமைப்படுகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளது.
1902 ஆம் ஆண்டில் மன்னர் எட்வர்ட் VII-க்காக ராயல் ப்ளெண்ட் தேநீரை உருவாக்கிய ஃபோர்ட்னம் மற்றும் மேசன், அரச குடும்பத்துடன் நீண்ட மற்றும் நெருக்கமான வரலாற்றைக் கொண்டுள்ளது. எலிசபெத் மகாராணி மற்றும் சார்லஸ்-க்கு தேநீர் மற்றும் காபியை சப்ளை செய்ததால் ட்வினிங்ஸ் பிராண்டும் ராஜ குடும்பத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது.