சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்தக் கோரி, பாகிஸ்தான் நாட்டு ராணுவத் தலைவர், வெளியுறவு முன்னாள் அமைச்சர் என பலர் போர் மிரட்டல் விடுத்துவரும் நிலையில், நேற்று கடிதம் மூலம் கெஞ்சியது. ஆனால், மீண்டும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேச்சு எழுந்துள்ளது. இது அந்நாட்டு பிரதமரின் முறை. ஆம், அவர் தான் தற்போது தண்ணீர் விவாகரத்தில் இந்தியாவை மிரட்டும் வகையில் பேசியுள்ளார். அவர் என்ன கூறியுள்ளார் என்பதை தற்போது பார்க்கலாம்.
“மீண்டும் பாடம் கற்பிப்போம்“ - பாகிஸ்தான் பிரதமர் மிரட்டல்
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், இந்தியாவை மிரட்டும் வகையில் பேசியுள்ளார்.
சிந்து நதி நீர் ஓட்டத்தை தடுத்தால், இந்தியா பாகிஸ்தானின் ஒரு துளி தண்ணீர் கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ள அவர், இந்தியாவிற்கு மீண்டும் பாடம் கற்பிக்கப்படும் என மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார். இது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.
ஏற்கனவே மிரட்டும் வகையில் பேசிய அசிம் முனிர் மற்றும் பிலாவல் பூட்டோ
சமீபத்தில் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனிர், சிந்து நதி குடும்பச் சொத்து அல்ல, பாகிஸ்தானிற்கு வரும் தண்ணீரை தடுக்க இந்தியா அணை கட்டினால், அதை உடைப்போம் என்று பேசியிருந்தார்.
இந்நிலையில், நேற்று பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோ, நரேந்திர மோடியின் தலைமையில் இந்திய அரசின் நடவடிக்கைகள் பாகிஸ்தானுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டினார்.
அதோடு, இந்திய பிரதமர் மோடிக்கும், இந்த ஆக்கிரமிப்புகளுக்கும் எதிரான நாம்(பாகிஸ்தானியர்கள்) ஒன்றுபட்டு நிற்க வேண்டியது அவசியம் என்றும், மீண்டும் போர் ஏற்பட்டால், சிந்து நதி உள்பட 6 நதிகளையும் மீட்போம் என்றும் தெரிவித்திருந்தார்.
பாகிஸ்தானின் தலைவர்கள் ஒருபுறம் இப்படி அடாவடியாக பேசினாலும், மறுபுறம், சத்தமில்லாமல் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் இந்தியாவிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தது. அதன்படி, "சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் இயல்பான செயல்பாட்டை உடனடியாக மீண்டும் தொடங்கவும், அதன் ஒப்பந்தக் கடமைகளை முழுமையாகவும் உண்மையாகவும் நிறைவேற்றவும் இந்தியாவை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்று எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில் தெரிவித்தது.
சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியது ஏன்.?
காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள், அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தில் 26 பேரை கொன்றனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ராணுவ நடவடிக்கைக்கு முன்னதாகவே, இந்தியா செய்த முதல் காரியம், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது தான். அதுவே பாகிஸ்தானிற்கு மிகப் பெரும் அடியாக கருதப்படுகிறது.
அதற்குப் பின்னர் தான், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா துல்லிய தாக்குதல்களை நடத்தி, தீவிரவாத நிலைகளை அழித்தது. பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, சில நாட்களில் நிறுத்தப்பட்டது. ஆனால், இந்தியா சிந்து நதி நீரை இன்னும் பாகிஸ்தானுக்கு தரவில்லை.
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தான், அந்நாட்டு தலைவர்கள் இந்தியா மீது வன்மத்தை கொட்டி வருகின்றனர். அந்த வரிசையில் தான் தற்போது அந்நாட்டு பிரதமர் இணைந்துள்ளார். ஆனால் அதே சமயம், தண்ணீருக்காக பாகிஸ்தான் கெஞ்சியும் வருகிறது.
தற்போது பாகிஸ்தான் பிரதமர் பேசியிருப்பதற்கு, இந்தியாவின் ஆக்ஷன் என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.