அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவரது நடவடிக்கைகளும், முடிவுகளும் உலக நாடுகளுக்கு தலைவலியாக மாறியுள்ளது.
இந்தியாவுக்கு தலைவலி தந்த ட்ரம்ப்:
அந்த வகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கான இறக்குமதி வரியை ( அமெரிக்காவின் பார்வை) தாறுமாறாக உயர்த்தியுள்ளது. இந்தியாவிற்கான இறக்குமதி வரி அதாவது இந்தியாவைப் பொறுத்தமட்டில் அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் பொருட்களுக்கான ஏற்றுமதி வரியை 50 சதவீதமாக உயர்த்தியுள்ளார்.
அமெரிக்கா பறக்கும் பிரதமர் மோடி:
அமெரிக்காவுடன் ஆண்டுக்கு 7.26 லட்சம் கோடி வர்த்தகம் செய்யும் இந்தியாவிற்கு இது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியா தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார். நியூயார்க்கில் நடக்கும் ஐநா சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த கூட்டம் செப்.9ம் தேதி முதல் செப். 23ம் தேதி வரை நடக்கிறது. இதில் உலக நாடுகள் பங்கேற்கின்றனர்.
ட்ரம்பைச் சந்திப்பாரா?
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்பை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், ட்ரம்பின் இந்த வரி விதிப்பால் இந்தியா மிக கடுமையான பாதிப்பைச் சந்திக்கும் அபாயத்தில் சிக்கியுள்ளது. பொருளாதார சரிவு, வேலையிழப்பு, உற்பத்தி பொருட்கள் தேங்கும் அபாயம் சூழ்ந்துள்ளதால் இந்தியா உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தில் சிக்கியுள்ளது.
இதனால், அமெரிக்கா செல்லும் மோடி ட்ரம்பை சந்தித்து வரி உயர்வை குறைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை ட்ரம்ப் - மோடி சந்திப்பிற்கான அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஆனால், நியூயார்க் செல்லும் மோடி ட்ரம்பைச் சந்திப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.
ஆட்டத்தை அதிகரித்த பாகிஸ்தான்:
மேலும், அதிபர் ட்ரம்ப் இந்தியா மீதான வரியை உயர்த்தியதாக அறிவித்த பிறகு அண்டை நாடான பாகிஸ்தானின் சத்தம் அதிகரித்து வருகிறது. ஏவுகணை மிரட்டல் உள்ளிட்ட பல எதிர்ப்புகளை பாகிஸ்தான் தெரிவித்து வருகிறது. இதன் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சீன, ரஷ்ய அதிபருடன் விரைவில் சந்திப்பு:
பிரதமர் மோடியின் இந்த மாத இறுதியில் ஷாங்காயில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க உள்ளார். அதில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் பிரதமர் மோடி இந்திய- சீன வர்த்தகம் குறித்து தீவிரமாக ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்தாண்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வர உள்ளார்.
இந்தியா -ரஷ்யாவுடன் இணக்கமாக இருப்பதாலே அமெரிக்கா வரியை தாறுமாறாக உயர்த்தியுள்ளது. இருப்பினும் பல நெருக்கடியான சூழலில் இந்தியாவுக்கு உறுதுணையாக நின்ற ரஷ்யாவின் உறவை இந்தியா ஒருபோதும் கைவிடாது என்றே கருதப்படுகிறது.
அமெரிக்க அதிபர் ட்ரம்புடனான சந்திப்பின் முடிவைப் பொறுத்தே இந்திய வர்த்தகம் குறித்து சீனா, ரஷ்யா உள்ளிட்ட ப்ரிக்ஸ் நாடுகளுடன் இந்தியா வேறு அணுகுமுறையில் வியாபாரத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது