Pak Asim Munir: பாகிஸ்தான் பிரதமரை காட்டிலும் ராணுவ தளபதி அசிம் முனிருக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்க இந்த மசோதா வழிவகை செய்கிறதாம்.
ராணுவ தளபதிக்கு அதிகாரங்கள்:
பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் நேற்று 27வது அரசியலமைப்பு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இது ராணுவத்திற்கு குறிப்பாக நாட்டின் ராணுவத் தலைவர் அசிம் முனிருக்கும் பரந்த அதிகாரங்களை வழங்குவதோடு நீதித்துறையையும் மறுசீரமைக்க வழிவகை செய்கிறது. கீழ்சபையில் கடும் கூச்சலுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில், 234 உறுப்பினர்கள் ஆதரவாகவும், நான்கு பேர் எதிராகவும் வாக்களித்ததாக சபாநாயகர் அயாஸ் சாதிக் அறிவித்தார். இந்த அமர்வில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பிஎம்எல்-என் தலைவர் நவாஸ் ஷெரீப் மற்றும் பிபிபி தலைவர் பிலாவல் பூட்டோ-சர்தாரி உள்ளிட்ட உயர்மட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
பிரதமர் பெருமிதம்:
பாகிஸ்தானில் அரசியல் பதற்றம் அதிகரித்து வரும் நேரத்தில், ஆளும் கூட்டணி முக்கிய பாதுகாப்பு மற்றும் நீதித்துறை நிறுவனங்களின் மீது கட்டுப்பாட்டை பலப்படுத்த முயற்சிக்கும் நேரத்தில் இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் நடவடிக்கைகளைப் புறக்கணித்ததால், செனட்டில் எந்தவித எதிர்ப்பும் இன்றி 64 வாக்குகளை ஆதரவாக பெற்ற முந்தைய ஒப்புதலைத் தொடர்ந்து இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. ”இந்த மசோதா தேசிய ஒற்றுமையின் நிரூபணம் என்றும், சபை ஒற்றுமையை வெளிப்படுத்தியதாகவும்” பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அசிம் முனிருக்கான புதிய அதிகாரம் என்ன?
புதிய சட்டமானது பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனிரை, புதிதாக உருவாக்கப்பட்ட பாதுகாப்புப் படைகளின் தலைவராக உயர்த்தியுள்ளது. இது ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று பிரிவுகளின் மீதும் அவருக்கு அரசியலமைப்பு அதிகாரத்தை வழங்குகிறது. பீல்ட் மார்ஷல், விமானப்படையின் மார்ஷல் மற்றும் கடற்படையின் அட்மிரல் போன்ற கௌரவ ஐந்து நட்சத்திர பதவிகள் வாழ்நாள் பட்டங்களாகவே இருக்கும். பதவிக்கால நீட்டிப்பு மற்றும் பணிநீக்கம் அல்லது பதவி இறக்கத்திற்கு எதிராக சட்டப் பாதுகாப்பை பெறுகிறார். நாட்டின் சட்ட அமைச்சர் அசாம் நசீர் தரார் பேசுகையில், இந்த சீர்திருத்தம் "ராணுவ மரியாதை மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில் பாதுகாப்பு நியமனங்களுக்கு அரசியலமைப்பு மேற்பார்வையைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
நீதித்துறையில் மாற்றம்:
புதிய மசோதாவானது அரசியலமைப்பு மற்றும் மாகாண விவகாரங்களைக் கையாள ஒரு கூட்டாட்சி அரசியலமைப்பு நீதிமன்றத்தையும் (FCC) நிறுவுகிறது, உச்ச நீதிமன்றம் சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளில் கவனம் செலுத்த அனுமதிக்கிறது. FCC அனைத்து மாகாணங்களிலிருந்தும் சமமான பிரதிநிதித்துவத்தையும் அரசியலமைப்பு மனுக்கள் மீது தானாக முன்வந்து அறிவிப்புகளை எடுக்கும் அதிகாரத்தையும் கொண்டிருக்கும். நீதிபதி இடமாற்றங்களை நீதித்துறை ஆணையம் மேற்பார்வையிடும். இடமாற்றத்தை மறுப்பது ஓய்வு பெற்றதாகக் கருதப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.