பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃபின் (Shehbaz Sharif) பரிந்துரையை ஏற்று அந்நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அதிபர் ஆரிஃப் ஆல்வி அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் வரும் 14-ஆம் (ஆகஸ்ட்,14,2023) தேதி நிறைவு பெற இருந்த நிலையில், அதற்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கலைக்குமாறு அதிபருக்கு பிரதமா் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டதைத் தொடா்ந்து, 90 நாள்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
கடந்த 2018 -ம் ஆண்டு அந்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அங்கு கூட்டணி ஆட்சி அமைந்தது. அதிக இடங்களில் வெற்றி பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சியின் தலைவர் இம்ஃப்ரான் கான் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைத்தது. நான்கு ஆண்டுகளாக இம்ரான் கான் பிரதமராக இருந்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான். அரசியல்வாதியும் கூட. கடந்த 1996-ம் ஆண்டில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை (Pakistan Tehreek-e-Insaf (PTI) ) தொடங்கினார்.
2018-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இவர் தலைமையிலான கட்சி ஆட்சியைப் பிடித்தது. நாட்டின் 22-வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார். ஆனால், அவரால் நீண்ட காலம் பதவியில் நீடிக்க முடியவில்லை. 2022-ம் ஆண்டு நடத்தப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அவர் தோல்வியை சந்தித்தார்.
விலைவாசி உயர்வு, கடும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை சந்தித்தது பாகிஸ்தான். நாடே நெருக்கடியான நிலையில் இருந்தபோது, இம்ரான் கான் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் திரும்ப பெற்றன. இதனால், கடந்த ஆண்டு ஏப்ரலில் இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்தது.
இவர் ஆட்சியில் இருந்தபோது, வெளிநாட்டு தலைவர்கள் வழங்கிய விலை உயர்ந்த பரிசு பொருட்களை பாதுகாக்கும் தோஷ்கானாவிடமிருந்து (Toshakhana) அவற்றை மலிவு விலையில் விற்றதாக அவர் மீது குற்றச்சாடு எழுந்தது. இம்ரான் கான் தேர்தல் ஆணையத்தில் அளித்த விளக்கத்தில், ‘‘கருவூலத்தில் இருந்த பரிசு பொருட்களை ரூ.2.15 கோடிக்கு வாங்கினேன். அவற்றை ரூ.5.8 கோடிக்கு விற்பனை செய்தேன்" என்று தெரிவித்திருந்தார்.
இம்ரான் கான் கைது:
அவர் மீது ஊழல், கொலை, பயங்கரவாதம், தேசத் துரோகம் என்ற பல்வேறு குற்றச்சாட்டுகளில் 150க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து இஸ்லாமாபாத் மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஆகஸ்ட் 5 அன்று உத்தரவிட்டது. இம்ரான் கான் கைது செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த மே-9ம் தேதி கைதானபோது கலவரம் வெடித்தது. இம்முறை கைது செய்யப்பட்டபோது அப்படியில்லை. இம்ரான் கான் கைதான மறுநாள் நாடாளுமன்ற கலைக்கப்பட்டதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
மேலும், நாட்டின் இடைக்கால பிரதமரை நியமிக்க மூன்று நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பொதுத்தேர்தலில் இம்ரான் கான் போட்டியிட முடியாது என்பது ஆதாரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பாலிஸ்தான் அரசு அந்நாட்டில் பொதுத்தேர்தலை தள்ளி வைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே நாட்டில் கலவரங்கள் தொடர்ந்து வருதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பது, தேர்தல் நடத்துவது மிகவும் சவாலானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. Pakistan Tehreek-e-Insaf (PTI) கட்சி கடந்த பொது தேர்தலில் அதிக இடங்களை பெற்றிருந்தது.