பாகிஸ்தானில் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளர் ஒருவர் நாட்டின் வளர்ச்சி குறித்து நேர்காணல் எடுத்துக் கொண்டிருந்த போது வாழைப்பழங்களில் வகைகள் குறித்து நேர்காணலில் பேசியவர் குறிப்பிட்டதால் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்த வீடியோ வைரலாகி வருகிறது.


க்வாஜா நவீத் அகமது என்பவரை நேர்காணல் எடுத்துக் கொண்டிருந்த பாகிஸ்தானின் நியூஸ் ஒன் செய்தி சேனல் தொகுப்பாளர் அல்வீனா அகா, க்வாஜா நவீத் அகமது பாகிஸ்தானில் விளையும் வாழைப்பழங்கள் இந்தியாவில் விளையும் வாழைப்பழங்களை விட அளவிலும், தரத்திலும் குறைவாக இருப்பதாகக் கூறினார். மேலும் அவர் மும்பையில் இருந்து கிடைக்கும் வாழைப்பழங்கள் மணம் கொண்டவையாக இருப்பதாகவும், வெறும் 6 வாழைப்பழங்களை ஒரு அறையில் வைத்தால் மொத்த அறையும் மணக்கும் என்றும் கூறினார். தொடர்ந்து அவர் தனது கைகளைப் பயன்படுத்தி வங்காளதேசத் தலைநகர் தாகாவில் விளையும் வாழைப்பழங்களின் அளவையும், பாகிஸ்தானின் சிந்த் பகுதியில் விளையும் வாழைப்பழங்களின் அளவையும் ஒப்பிட்டார். இதில் சிந்த் பகுதியில் விளையும் வாழைப்பழங்கள் ஒரு விரலின் அளவிலேயே இருப்பதாகத் தெரிவித்தார்.



அல்வீனா அகா


 


பாகிஸ்தான் அரசு அந்நாட்டின் மண் வளத்தை ஆய்வு செய்ய வேண்டும் என அவர் கூறிய போது, நேர்காணல் எடுத்துக் கொண்டிருந்த செய்தி தொகுப்பாளர் அல்வீனா அகா வெடித்துச் சிரித்தார். நேர்காணலின் போது, சிரிப்பை அடக்க முடியாத செய்தி தொகுப்பாளர் பற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 






செய்தி தொகுப்பாளர் அல்வீனா அகா சிரிப்பதைப் பார்த்த க்வாஜா நவீத் அகமது அல்வீனாவுடன் இணைந்து சிரித்ததோடு, தனது கருத்தை முழுவதுமாகக் கூறும் வரை காத்திருக்குமாறு கூறிவிட்டு, தாகாவில் இருந்து வாழைப்பழங்களை இறக்குமதி செய்வது பாகிஸ்தானில் அதிக விற்பனையையும் லாபத்தையும் ஈட்டும் என்று கூறியுள்ளார். இந்த வீடியோவைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாகிஸ்தான் செய்தி நிருபர் நைலா இனாயத், `தற்போது வெற்றி பெற்றவர், மும்பை!’ என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். சுமார் 11 ஆயிரம் லைக் பெற்றுள்ள அவரது ட்வீட் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. 



பாகிஸ்தான் செய்தி தொலைக்காட்சியான நியூஸ் ஓன் சேனலின் அதிகாரப்பூர்வ யூட்யூப் பக்கத்திலும் பலரும் இந்த வீடியோவில் தங்கள் கிண்டலான கமெண்ட்களைப் பதிவிட்டு வருகின்றன. பாகிஸ்தான் மண்ணின் வளம், பாகிஸ்தான் நாட்டில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள், பயிர்களின் ஏற்றுமதி, இறக்குமதி விவகாரங்கள், லாபம் ஆகியவை குறித்த நேர்காணலில் தொகுப்பாளர் அல்வீனா அகா, க்வாஜா நவீத் அகமதுவுடன் உரையாடியுள்ளார். இந்த உரையாடலில் பாகிஸ்தான் நாட்டின் ஆய்வு மற்றும் வளர்ச்சி குறித்து மிகவும் ஆழமாகப் பேசப்பட்டுள்ளது. எனவே சிலர் இந்த நேர்காணலை நேர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.