ஆஃப்கானிஸ்தானில் தாலிபான் அரசு பொறுப்பேற்று இரண்டு மாதங்களுக்கு மேல் ஆன நிலையில் அங்கே கடும் உணவுப் பஞ்சம் நிலவு வருகிறது. இதனால் வறுமையில் சுழலும் ஆஃப்கான் மக்கள் தங்கள் குழந்தைகளைச் சந்தையில் விற்பதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. வறுமையைக் கட்டுக்குள் கொண்டு வர ஆஃப்கான் மத்திய வங்கியில் இருக்கும் இருப்புப் பணத்தை சுழற்சியில் விடுமாறு அந்த நாட்டு நிதித்துறை அமைச்சகம் வங்கிக்கு கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஆஃப்கானிஸ்தானின் ஒரே செய்தி சேனலான டோலோ நியூஸும் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.
ஆஃப்கானிஸ்தானில் பட்டினிச்சாவுகள் ஆரம்பித்துவிட்டது. தலைநகர் காபூலில் அனாதைகளான 8 குழந்தைகள் சமீபத்தில் பட்டினியால் வாடி உயிரிழந்திருக்கிறார்கள். அனைவரும் 10 வயதுக்குட்பட்டவர்கள். இனி வரும் காலங்களில் இந்த பட்டினி சாவுகள் ஆப்கானிஸ்தானில் சர்வசாதாரணமாக நடக்கும் என்று எச்சரித்திருக்கிறது ஐநா. ஏற்கனவே போர், ஆயுதங்களின் பிடியில் சிக்கி வறுமையில் தள்ளப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களின் வறுமையை தாலிபான்களின் வரவு அதிகப்படுத்தியிருக்கிறது. தானும் படுக்கமாட்டான் தள்ளியும் படுக்கமாட்டான் என்பார்களே அதேபோல தான் கொஞ்சமும் இரக்கமில்லாமல் நடந்துகொண்டிருக்கின்றனர் தாலிபான்கள். வெளிநாடுகளில் இருந்து மக்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரண உதவிகளையும் கிடக்கவிடாமல் தடுத்து வைத்திருக்கிறார்கள். இதனால் மற்ற நாடுகளின் உதவிக்கரம் ஆப்கானிஸ்தானுக்கு நீளமுடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்போது ஆப்கானிஸ்தானின் பொருளாதாரமும் அதள பாதாளத்திற்குப் போயிருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் வசிக்கும் சுமார் நான்கு கோடி மக்களில் இரண்டரை கோடி மக்கள் போதிய உணவின்றி தவிக்கிறார்கள். இந்த எண்ணிக்கை ஒன்றரை கோடியில் இருந்து இரண்டரை கோடிக்கு அதிகரிக்க வெறும் இரண்டே மாதங்கள் தான் ஆகியிருக்கிறது. காரணம் தாலிபான்கள் என்கிறது WFP எனப்படும் உலக உணவு அமைப்பு. ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் மற்ற நாடுகளையே நம்பியிருந்த நிலையில், தற்போது தாலிபான்களின் வரவால் சரிந்திருக்கிறது. அஷ்ரஃப் கனி ஆட்சியை விட்டு சென்ற பின்னர் அரசு பணியாளர்களுக்கு சம்பளமே வழங்கப்படவில்லையாம். பல ஆண்டுகளாக போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானியர்கள் இனி பட்டினியால் சாகப்போகிறார்கள் என்று அச்சம் தெரிவித்திருக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
தீர்வு கிடைக்குமா?
வறுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க தற்போது பாகிஸ்தான் உடனான வர்த்தகத்தை அண்மையில் தொடங்கியுள்ளது ஆஃப்கானிஸ்தான். இதன்படி பாகிஸ்தான் உடனான வர்த்தகத்துக்கான ஸ்பின் போல்தக் நுழைவுவாயிலைத் தற்போது திறந்துவிட்டுள்ளது ஆஃப்கானிஸ்தான்.