ஆப்கன் தலைநகர் காபுலில் உள்ள ராணுவ மருத்துவமனையில் இன்று ஏற்பட்ட இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ஆஃப்கான் தலைநகர் காபுலில் உள்ள ராணுவ மருத்துவமனையில் இந்திய நேரப்படி மதியம் இரண்டு மணி அளவில் இரட்டை வெடிகுண்டுத் தாக்குதல் நடந்தது. ஒரு தாக்குதல் மருத்துவமனை உள்ளேயே நிகழ்ந்த நிலையில் மற்றொரு தாக்குதல் மருத்துவமனைக்கு வெளியே நடந்துள்ளது. இது சுமார் 400 படுக்கை வசதி கொண்ட ஆஃப்கானின் மிகப்பெரும் மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்த வெடிகுண்டுத் தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. மேலும் 50 வருடங்களுக்கு முன்பு இதே மருத்துவமனையில் இது போன்றதொரு இரட்டைத் தாக்குதல் நடந்ததாக அந்தப் பகுதி மக்கள் குறிப்பிட்டு வருகின்றனர். 






ஆஃப்கானிஸ்தானில் தலிபான் அரசு பொறுப்பேற்ற பிறகு கடும் உணவுப் பஞ்சம் நிலவிவருவது குறிப்பிடத்தக்கது. ஆஃப்கானிஸ்தானில் பட்டினிச்சாவுகள் ஆரம்பித்துவிட்டது. தலைநகர் காபூலில் அனாதைகளான 8 குழந்தைகள் சமீபத்தில் பட்டினியால் வாடி உயிரிழந்திருக்கிறார்கள். அனைவரும் 10 வயதுக்குட்பட்டவர்கள். இனி வரும் காலங்களில் இந்த பட்டினி சாவுகள் ஆப்கானிஸ்தானில் சர்வசாதாரணமாக நடக்கும் என்று எச்சரித்திருக்கிறது ஐநா. ஏற்கனவே போர், ஆயுதங்களின் பிடியில் சிக்கி வறுமையில் தள்ளப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களின் வறுமையை தாலிபான்களின் வரவு அதிகப்படுத்தியிருக்கிறது. தானும் படுக்கமாட்டான் தள்ளியும் படுக்கமாட்டான் என்பார்களே அதேபோல தான் கொஞ்சமும் இரக்கமில்லாமல் நடந்துகொண்டிருக்கின்றனர் தாலிபான்கள். வெளிநாடுகளில் இருந்து மக்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரண உதவிகளையும் கிடக்கவிடாமல் தடுத்து வைத்திருக்கிறார்கள். இதனால் மற்ற நாடுகளின் உதவிக்கரம் ஆப்கானிஸ்தானுக்கு நீளமுடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்போது ஆப்கானிஸ்தானின் பொருளாதாரமும் அதள பாதாளத்திற்குப் போயிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் வசிக்கும் சுமார் நான்கு கோடி மக்களில் இரண்டரை கோடி மக்கள் போதிய உணவின்றி தவிக்கிறார்கள். இந்த எண்ணிக்கை ஒன்றரை கோடியில் இருந்து இரண்டரை கோடிக்கு அதிகரிக்க வெறும் இரண்டே மாதங்கள் தான் ஆகியிருக்கிறது. காரணம் தாலிபான்கள் என்கிறது WFP எனப்படும் உலக உணவு அமைப்பு. ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் மற்ற நாடுகளையே நம்பியிருந்த நிலையில், தற்போது தாலிபான்களின் வரவால் சரிந்திருக்கிறது. அஷ்ரஃப் கனி ஆட்சியை விட்டு சென்ற பின்னர் அரசு பணியாளர்களுக்கு சம்பளமே வழங்கப்படவில்லையாம். பல ஆண்டுகளாக போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானியர்கள் இனி பட்டினியால் சாகப்போகிறார்கள் என்று அச்சம் தெரிவித்திருக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.



ஆப்கானிஸ்தானில் பருவகாலம் வேறு தொடங்கப்போகிறது. ஏற்கனவே குழந்தைகள் வெறும் பிரட்டை மட்டும் உண்பதால் போதிய சத்தில்லாமல் பல்வேறு நோய்களால் துன்பப்படுகின்றனர். பருவகாலம் குழந்தைகள் உயிரிழப்பை அதிகப்படுத்தப்போகிறது என்று அபாய குரல் எழுப்புகின்றனர். ஆப்கானிஸ்தானில் பேரழிவு தொடங்கிவிட்டது. இப்போது செயல்படவில்லையென்றால் விளைவு உலகமே பார்க்காத பேரழிவாக இருக்கும் என்று எச்சரிக்கின்றனர் ஐநா அமைப்பினர். குழந்தைகளுக்கு உணவு அளிக்க முடியாத பெற்றோர்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பவும், விற்பனை செய்யவும் தொடங்கியிருக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியிருக்கிறது. ஆப்கானிஸ்தான் மட்டுமல்லாமல் இந்த பட்டினிச்சாவுகள் ஏமன் மற்றும் சிரியாவையும் குலைக்கப்போகிறது என்று எச்சரித்திருக்கிறார்கள்.



பட்டினி மற்றும் வேலைவாய்ப்பின்மையை சமாளிக்க தாலிபான்கள் தரப்பில் எடுத்திருக்கும் நடவடிக்கை விநோதமாக இருக்கிறது. தாலிபான்களின் செய்தி தொடர்பாளர் ஸபியுல்லா முஜாஹித் சமீபத்தில் பேட்டி ஒன்ற அளித்திருந்தார். அந்த பேட்டியின் போது நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மையை சமாளிக்க ஒரு திட்டம் கொண்டு வர இருக்கிறோம். ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களில் வேலை வாய்ப்பை கொடுக்க இருக்கிறோம். வேலைக்கு சம்பளம் கிடையாது அதற்கு பதில் கோதுமை கொடுக்கபப்டும் என்றிருக்கிறார். காபூலில் மட்டும் 40000 பேருக்கு வேலை கொடுக்க திட்டம் வைத்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார் முஜாஹித். இத்திட்டத்தை வேலை வாய்ப்பின்மைக்கு எதிரான போராட்டத்தில் முக்கியமான படி என்று கூறியிருக்கிறார். ஆனாலும் இந்த முறையை நீண்ட நாள்களுக்கு பயன்படுத்த முடியாது. உடனடியாக ஏதாவது செய்தே தீரவேண்டும் இல்லையென்றால் நம் கண்முன்னே லட்சக்கணக்கானோர் செத்து மடிவதை பார்க்க வேண்டி இருக்கும் என்று கவலை தெரிவித்திருக்கிறது ஐ.நா.



துப்பாக்கியால் நாட்டை வெல்லலாம். ஆனால் அரசாட்சிக்கு துப்பாக்கி மட்டும் போதாது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள் தாலிபான்கள்.