பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம் கனேவால் மாவட்டத்தில் தெய்வ நிந்தனை (Blapshemy) என்ற பெயரில் நடுத்தர வயது மனிதரை கும்பல் வன்முறையாளர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கும்பல் வன்முறை சம்பவத்துக்குப் பிரதமர் இம்ரான் கான் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். 


படுகொலை செய்யப்பட்ட நபர்,  மசூதியில் உள்ள இசுலாத்தின் புனித நூலை சேதப்படுத்தி எரித்ததாக கூறப்படுகிது. உயிரிழந்தவரின் பெயர் 'முஸ்தாக்' என்று அறியப்படுகிறது.         


பஞ்சாப் மாகாணத்தின் கனேவால் மாவட்டத்தில் உள்ள ஜங்கிள் தேரா கிராமத்தில் உள்ள மசூதியின் அறங்காவலர் மியான் முகமது ரம்சான் இதுகுறித்து Associated Press என்ற செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "மசூதிக்குள் புகை கசிந்ததைப் பார்த்து முதலில் அங்கு சென்று பார்த்தேன். அப்போது, நடுத்தர வயது மிக்க நபர் ஒருவர், புனித நூலை எரித்துக் கொண்டிருந்தார். பிறகு, மேலுமொரு புனித நூலை எரிக்கத் தொடங்கினார். இதைத் தடுப்பதற்காக கூச்சலிட்டேன். உடனடியாக, உள்ளூர் மக்கள் திரண்டனர்" என்று தெரிவித்தார். 




 


தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பஞ்சாப் காவல்துறை அதிகாரிகள், கும்பல் வன்முறையிலிருந்து பாதுகாக்க முஸ்தாக்கை  முறையாக கைது செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், உணர்ச்சிக் கொதிப்பு நிலையில் இருந்த வன்முறையாளர்கள், காவல்துறையிடம் இருந்து முஸ்தாக்கை இழுத்து, திட்டமிட்ட வன்முறை செயல்களைக் கட்டவிழித்து விட்டுள்ளனர். நாலாபுறத்திலும் இருந்து கல்லால் அடித்துள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் முஸ்தாக் உயிரிழந்தார். கொடூரத்தின் உச்சமாக இறந்தவரின் உடலை கும்பல் வன்முறையாளர்கள் அங்குள்ள மரத்தில் தூக்கு மாட்டி தொங்கவிட்டுள்ளனர். 


இந்த கொடூரமான சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.


இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டரில், " கும்பல் வன்முறையை சிறிதளவும் கூட ஏற்றுக் கொள்ள முடியாது. சட்டத்தின் ஆட்சிதான் நமக்கு பிரதானம். அதில் எந்த சமரசத்திற்கு இடமில்லை. சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ள யாரும் அனுமதிக்கப்படக் கூடாது. குற்றவாளிகள் மீதும், குற்றத்தை தடுப்பதில் தோல்வியுற்ற காவல்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை குறித்து பஞ்சாப் மாகாண காவல்துறை ஆணையர் விரைவில் அறிக்கை சமர்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.       


 






 


பாகிஸ்தானில் மதநிந்தனை (Blapshemy) என்ற பெயரில் அவ்வப்போது இத்தகைய கொடூர சமபவங்கள் நடைபெற்று வருகிறது. முன்னதாக, பஞ்சாப் மாகாணம் சியல்கோட் மாவட்டத்தில், விளையாட்டு உபகரண தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்த இலங்கை பிரஜையான தியவதன மத நிந்தனை என்ற பெயரில் பொது வெளியில் வைத்து எரித்துக் கொல்லப்பட்டார்.