கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி அடுத்த மாதம் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக, கடந்த 2014ஆம் ஆண்டு, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.


இந்திய - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே மோதல்:


இதையடுத்து, இந்திய - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மோதல் வெடித்ததையடுத்து, பாகிஸ்தான் உயர்மட்ட தலைவர் யாரும் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவில்லை. இதனை தொடர்ந்து, 9 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் தலைவர் ஒருவர் இந்தியாவிற்கு வருகிறார்.


குறிப்பாக, புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 2019ஆம் ஆண்டு, பாலகோட்டில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவம், இரு நாட்டு உறவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னர், 2019ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. 


மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு, யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன. இப்படி, இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான உறவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், பிலாவல் பூட்டோ சர்தாரியின் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.


வரும் மே 4 மற்றும் 5 தேதிகளில் இந்தியாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் சர்தாரி கலந்து கொள்கிறார்.


ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பது, ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஒரு பிராந்திய அரசியல் மற்றும் பாதுகாப்பு கூட்டமைப்பாகும். இந்த கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் கோவாவில் நடைபெறுகிறது.


ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு:


கடந்த 2017ஆம் ஆண்டு, ஜூன் 9ஆம் தேதி, இந்தியா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நிரந்தர உறுப்பினரானது. ஆப்கானிஸ்தான், பெலாரஸ், ​​ஈரான் மற்றும் மங்கோலியா ஆகிய நான்கு நாடுகள், அமைப்பின் கண்காணிப்பு நாடுகளாக உள்ளன. பேச்சுவார்த்தை நாடுகளாக ஆர்மீனியா, அஜர்பைஜான், கம்போடியா, நேபாளம், இலங்கை மற்றும் துருக்கி உள்ளன.


எட்டு உறுப்பினர்களைக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு அதன் உறுப்பு நாடுகளிடையே பொருளாதார, அரசியல் மற்றும் ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் 20 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட ஒரு பெரிய பிராந்திய அதிகார கூட்டமைப்பாகும். இது உலகின் மொத்த மக்கள்தொகையில் 42 சதவீதத்தையும், உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.


மேலும் படிக்க: World Corona Spike: உலக அளவில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸின் பாதிப்புகள் என்ன? தீவிரமாகிறதா தொற்று? முழு விவரம்..