வரும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில், டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டின் இரவு விருந்துக்கு வெளிநாட்டு தலைவர்களை வரவேற்கும் வகையில் அச்சிடப்பட்டு அழைப்பிதழில் இந்தியாவுக்கு பதில் பாரத் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. 


இந்தியா நாட்டின் பெயர் மாற்றப்படுகிறதா?


எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு I.N.D.I.A என பெயர் வைத்ததில் இருந்தே, இந்தியா என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் பாரத் என்ற வார்த்தையை பாஜக தலைவர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அதற்கு ஏற்றார்போல், பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், "இந்தியா என்ற பெயரை சொல்லி அழைப்பதை தவிருங்கள். இந்தியாவிற்கு பதிலாக பாரதம் என்ற பெயரை மக்கள் பயன்படுத்த வேண்டும்" என வலியுறுத்தினார்.


இந்த சூழலில், இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது. ஆனால், மத்திய அரசு அதை மறுத்து வருகிறது.


இந்தியா பெயரை உரிமை கோருகிறதா பாகிஸ்தான்?


இந்த நிலையில், இந்தியாவின் பெயரை 'பாரதம்' என மத்திய பாஜக அரசு மாற்றும்பட்சத்தில், இந்தியா என்ற பெயருக்கு பாகிஸ்தான் உரிமை கோரலாம் என தகவல் வெளியாகியுள்ளது. South Asia Index என்ற செய்தி நிறுவனம், எக்ஸ் (ட்விட்டர்) வலை பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "இந்தியா என்ற பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றி, ஐநா மட்டத்தில் அதற்கான அங்கீகாரத்தை வாங்கினால், அந்த பெயருக்கு பாகிஸ்தான் உரிமை கோரலாம் என உள்நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


பாகிஸ்தானில் சிந்து பகுதி அமைந்துள்ளதால் அந்நாட்டு தேசியவாதிகள் நீண்ட காலமாக அதை மேற்கோள் காட்டி, பாகிஸ்தானுக்கு 'இந்தியா' பெயரில் உரிமை உண்டு என்று வாதிட்டு வருகின்றனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


இது தொடர்பான மற்றொரு பதிவில், "இந்தியாவின் காலனித்துவ சின்னத்தை நீக்கம் செய்யும் வகையில், இந்தியாவின் பெயரை இந்தியாவிலிருந்து பாரத் என மாற்றுவதற்கு இந்திய அரசு திட்டமிட்டு வருகிறது. பாரத் என்ற பெயர், சமஸ்கிருத மொழியில் இருந்து வந்துள்ளது. இந்திய பிராந்தியத்தை ஆண்ட மன்னரின் பெயர் பாரத்.


இந்தியா என்பது சிந்துப் பகுதியைக் குறிக்கிறது. சிந்து நதியின் பெரும்பாலான படுகை, தற்போதைய பாகிஸ்தானில்தான் உள்ளது. சுதந்திரம் பெற்றபோது, புதிய நாட்டிற்கு "இந்தியா" என்ற பெயரை பிரிட்டிஷ் இந்தியாவுக்கு சூட்டுவதை ஜின்னா எதிர்த்தார். அதற்கு பதிலாக ஹிந்துஸ்தான் அல்லது பாரத் என்ற பெயர் வைக்க வேண்டும் என பரிந்துரைத்தார். 


இந்திய வலதுசாரிகள் நீண்ட காலமாக "இந்தியா" என்ற பெயரை எதிர்த்து வருகின்றனர். இந்தியா என்ற பெயர் நாட்டிற்கு 'அவமானம்' என்று பாஜக தலைவர் ஒருவர் சமீபத்தில் கூறியிருந்தார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதற்கிடையில், முன்னாள் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், நாட்டின் உண்மையான பெயர் சந்தேகத்திற்கு இடமின்றி பாரத்தான் என்றும், அதை இந்தியா என்று அழைக்க ஆரம்பித்தது ஆங்கிலேயர்கள் என்றும் கூறியிருந்தார்.